‘அம்பு’ சின்னம் விவகாரம்: நிதிஷ் குமார், தேர்தல் ஆணையத்திற்கு டெல்லி ஐகோர்ட் நோட்டீஸ்

ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் அம்பு சின்னம் விவகாரத்தில் சரத்யாதவ் அணியினர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த டெல்லி ஐகோர்ட்டு, பீகாட் முதல்வர் நிதிஷ் குமார் மற்றும் தேர்தல் ஆணையத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
Published on

புதுடெல்லி:

பீகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் ராஷ்டரிய ஜனதா தளம் கட்சியின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்த நிலையில் மிகப்பெரும் அரசியல் திருப்பமாக கடந்த ஆகஸ்ட் மாதம் ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் இருந்த கூட்டணியை முறித்துக்கொண்ட நிதிஷ் குமார், தனது முதல் மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். ஆனால், மறுநாளே பா.ஜ.க. ஆதரவுடன் முதல்வராக நிதிஷ் குமார் மீண்டும் பதவியேற்றார். பா.ஜ.க.வை சேர்ந்த சுஷில் குமார் மோடி துணை முதல்வராக பொறுப்பேற்று கொண்டார்.

நிதிஷ் குமார் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தது, ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் சரத் யாதவை கடும் அதிருப்திக்கு உள்ளாக்கியது. தொடர்ந்து எதிர் கருத்துக்களை கூறி வந்த சரத் யாதவின் மாநிலங்களவை கட்சி தலைவர் பதவி மற்றும் கட்சி பதவியையும் நிதிஷ் குமார் பறித்தார்.

இதையடுத்து, நிதிஷ் குமாருக்கு எதிராக அணி திரட்டி வந்த சரத் யாதவ், தேர்தல் கமிஷனில் கட்சி மற்றும் சின்னத்திற்கு உரிமை கோரி மனு அளித்தார். அதில், 'கட்சியின் பெரும்பாலான தேசிய நிர்வாகிகள், எங்களிடம் உள்ளதால், நாங்கள் தான் உண்மையான ஐக்கிய ஜனதா தளம் என அறிவிக்க வேண்டும். கட்சியின் சின்னமான அம்பு சின்னம் எங்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும்' என கூறப்பட்டிருந்தது. இதேபோல் நிதிஷ்குமார் அணியும் கட்சி மற்றும் சின்னத்திற்கு உரிமை கோரி மனு தாக்கல் செய்து, ஆதரவு உறுப்பினர்கள் கொண்ட பட்டியலையும் அளித்தது.

இந்த மனுக்கள் மீது விசாரணை நடத்திய தேர்தல் ஆணையம், பெரும்பான்மையான உறுப்பினர்களின் ஆதரவு உள்ளதால் நிதிஷ் குமாருக்கு ஐக்கிய ஜனதா தள சின்னமான அம்பு சின்னத்தை வழங்கியது.

கட்சியின் அம்பு சின்னத்தை நிதிஷ் குமார் அணிக்கு வழங்கிய தேர்தல் ஆணைய உத்தரவுக்கு எதிராக சரத் யாதவ் தரப்பில் டெல்லி ஐகோர்ட்டில் நேற்று மனுதாக்கல் செய்தது. கட்சியின் அதிக நிர்வாகிகள் தங்கள் பக்கம் உள்ளதாகவும், தேர்தல் ஆணையம் நியாமான விசாரணை நடத்தாமல் சின்னத்தை ஒதுக்கி விட்டதாகவும் மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில், இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இந்த மனுவினை விசாரித்த நீதிபதிகள், தேர்தல் ஆணையம் மற்றும் நிதிஷ் குமார் தரப்பினர் தங்களது பதிலை தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறி வழக்கை பிப்ரவரி மாதம் 18-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com