ஜெயலலிதா இல்லாத வெற்றிடத்தை ரஜினிகாந்த் நிரப்புவாரா?- தீபா

ஜெயலலிதா இல்லாத வெற்றிடத்தை ரஜினிகாந்த் நிரப்புவாரா? என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும் என்று ஜெ.தீபா கூறினார். #Deepa #Rajinikanth
கிருஷ்ணகிரியில் நடந்த பொதுக்கூட்டத்தில் ஜெ.தீபா பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய காட்சி
கிருஷ்ணகிரியில் நடந்த பொதுக்கூட்டத்தில் ஜெ.தீபா பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய காட்சி
Published on

டாக்டர் எம்.ஜி.ஆரின் 101-வது பிறந்த நாள் மற்றும் ஜெயலலிதாவின் 70-வது பிறந்த நாளை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்ட எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை சார்பில் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கிருஷ்ணகிரி 5 ரோடு ரவுண்டானாவில் நேற்று மாலை நடைபெற்றது. இவ்விழாவிற்கு மாவட்ட செயலாளர் மன்னன் சிவா என்கிற சிவகுமார் தலைமை தாங்கினார்.

இவ்விழாவில் மாநில பொதுச்செயலாளர் ஜெ.தீபா கலந்து கொண்டு ஏழை, எளிய பொதுமக்களுக்கு தையல் இயந்திரங்கள், அயன்பாக்ஸ் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார். இதில் மாநில தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பாளர்கள், நகர, ஒன்றிய, ஊராட்சி மற்றும் கிளை கழக தொண்டர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

இதனை தொடர்ந்து ஜெ.தீபா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-


பெரியார் குறித்து பாரதிய ஜனதா கட்சி தேசிய தலைவர் ஹெச்.ராஜா சொன்ன கருத்து மிக தவறான கருத்து. சர்ச்சைக்கு உரிய கருத்து, சிலையை அகற்ற வேண்டும் என்று சொல்லக்கூடிய அதிகாரம் அவருக்கு இல்லை. இது தமிழகம். டில்லி தர்பார் இல்லை. அங்கு வேண்டும் என்றால் யார் சிலையை வைக்க வேண்டும் என அவர் முடிவு செய்து கொள்ளலாம். தந்தை பெரியார் சிலையை அகற்ற வேண்டும் என சொன்னது மிகவும் கொடூரமான ஒரு விமர்சனம். அது கண்டிக்கதக்கது. மதம் சார்ந்த கொள்கைகளை தமிழக மக்கள் மீது திணிக்கக்கூடாது. விரும்புபவர்கள் வேண்டும் என்றால் அதை பின்பற்றி கொள்ளலாம்.

தமிழக அரசு காவிரி பிரச்சனையில் இதுவரை செயல்படாமல் உள்ளது. மேலாண்மை வாரியம் அமைப்பதில் தாமதம் நடந்து உள்ளது. குளறுபடிகள் இருக்கு. எந்த முயற்சியும் அவர்கள் மேற்கொள்வதாக தெரியவில்லை. தமிழக அரசு செயல்படவில்லை. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது. இந்த அரசு முழுமையாக அகற்றப்பட வேண்டிய ஆட்சி.

ரஜினிகாந்த் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என நினைத்தால் அது வரவேற்கதக்கது. ஜெயலலிதா இல்லை என்பதை தான் வெற்றிடம் என ரஜினிகாந்த் குறிப்பிட்டு இருக்கிறார். அதில் எனக்கு மாற்று கருத்து இல்லை. அந்த வெற்றிடத்தை ரஜினிகாந்த் தான் நிரப்புவாரா? என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

என்னுடைய பெயரில் சமூக வலைதளத்தில் பலர் தவறான முறையில் பயன்படுத்தி வருகிறார்கள். யாரோ சொல்வது எல்லாம் என்னுடைய கருத்துக்களாக வெளிவருகிறது. அது கண்டிக்கத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com