தீபா மீண்டும் கணவருடன் சேர்ந்தார்: எடப்பாடி அரசு மீது பாய்ச்சல்

ஜெ.தீபாவும் அவரது கணவர் மாதவனும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்த நிலையில் மீண்டும் ஒன்று சேர்ந்துள்ளனர்.
தீபா மீண்டும் கணவருடன் சேர்ந்தார்: எடப்பாடி அரசு மீது பாய்ச்சல்
Published on

சென்னை:

எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை பொதுச்செயலாளர் ஜெ.தீபாவும், அவரது கணவர் மாதவனும் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 6 மாதமாக பிரிந்து வாழ்ந்தனர்.

தி.நகரில் உள்ள தீபாவின் வீட்டைவிட்டு வெளியேறிய மாதவன் வெளியில் தங்கி இருந்தார்.

இதுகுறித்து மாதவன் ஏற்கனவே அளித்திருந்த பேட்டியில், கருத்து வேறுபாடு காரணமாக நாங்கள் பிரிந்து வாழ்கிறோம். அதனால் வெளியில் தங்கியுள்ளேன். வீட்டில் இருந்து அழைப்பு வந்தால் செல்வேன் என்றார்.

சமீபத்தில் தீபா போயஸ் கார்டனில் புகுந்து பரபரப்பை ஏற்படுத்தினார். அங்கு வருமாறு கணவர் மாதவனை அழைத்தார். அதை ஏற்று மாதவனும் போயஸ் கார்டனுக்கு வந்தார். அப்போது தீபா நிருபர்களிடம் கூறுகையில், எனது பாதுகாப்புக்காக கணவரை போயஸ் கார்டனுக்கு அழைத்தேன் என்றார்.

சிறிது நேரம் போயஸ் கார்டனில் இருந்த தீபா பின்னர் அங்கிருந்து வெளியே சென்றார். அதன் பிறகும் மாதவன் தீபா வீட்டுக்கு செல்லவில்லை.

இந்த நிலையில் தீபா, கணவர் மாதவன் இடையே இருந்து வந்த கருத்து வேறுபாடு நீங்கியது. அவர்கள் இருவரும் ஒன்றாக சேர்ந்தனர். இதையடுத்து இருவரும் நேற்று நள்ளிரவு 12.30 மணியளவில் ஜெயலலிதா நினைவிடத்துக்கு வந்தனர். அங்கு இருவரும் ஒன்றாக ஜெயலலிதா சமாதியில் மலர் அஞ்சலி செலுத்தினார்கள்.

பின்னர் தீபா நிருபர்களிடம் கூறியதாவது:-

அரசியல் என்பது வேறு, குடும்பம் என்பது வேறு. எடப்பாடி பழனிசாமி அரசு பெரும்பான்மையை இழந்து விட்டது. இந்த அரசு நீடிப்பது தவறு. இந்த ஆட்சி கலைக்கப்பட வேண்டும்.

நீட் தேர்வை பொறுத்த வரையில் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள்தான் பெரும் பாலானோர் மருத்துவ படிப்பு படிக்க தேர்வாகி உள்ளனர்.

மாநில பாடத்திட்டத்தில் படித்த ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களின் மருத்துவர் கனவு சிதைக்கப்பட்டுள்ளது.

இதற்காக தமிழக அரசு சரியான நடவடிக்கை எடுக்காததே காரணம். அரசு சரியான நடவடிக்கை எடுத்திருந்தால் மாணவி அனிதாவின் மரணம் நிகழ்ந்திருக்காது.

அ.தி.மு.க.வை நோக்கித்தான் பயணம் எப்போதும் இருக்கும். அ.தி.மு.க.வுக்கு என்றுமே தலைமை நான்தான். என்னை பொறுத்தவரை எப்போதுமே துரோக கும்பல் அ.தி.மு.க. வுக்குள் வந்து விடக்கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் தீபாவும், கணவர் மாதவனும் தி.நகரில் உள்ள வீட்டுக்கு புறப்பட்டு சென்றனர். 6 மாதம் கழித்து மாதவன் தீபாவின் வீட்டுக்கு திரும்பியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com