

கொல்கத்தா:
தேசத் தலைவர்களான சுவாமி விவேகானந்தர் மற்றும் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பிறந்த நாளை தேசிய விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கடிதம் எழுதியுள்ளார்.
இது குறித்து மம்தா டுவிட் செய்துள்ளார். அதில், 'சுவாமி விவேகானந்தர் மற்றும் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் இருவரும் தேசிய மற்றும் உலகளவில் முக்கிய தலைவர்களாக திகழ்ந்தவர்கள். அவர்களின் பிறந்தநாளை அரசு தேசிய விடுமுறை தினமாக அறிவிக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளேன்' எனக் குறிப்பிட்டிருந்தார்.
ஜனவரி 12-ம் தேதி சுவாமி விவேகானந்தர் பிறந்த நாளாகவும், ஜனவரி 23-ம் தேதி நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்த நாளாகவும் கொண்டாடப்படுகிறது. இருவரும் மேற்கு வங்காள மாநிலத்தில் பிறந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.