மேற்கு வங்காளம் - பேரணி சென்றபோது போலீசாருடன் ஏற்பட்ட மோதலில் பாஜக தொண்டர் பலி

மேற்கு வங்காள மாநிலத்தில் பா.ஜ.க. தொண்டர்களுக்கும் போலீசாருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில், போலீசார் தாக்கியதில் தொணடர் ஒருவர் பலியானதாக மாநில தலைவர் குற்றம்சாட்டியுள்ளார்.
பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா
பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா
Published on

கொல்கத்தா:

மேற்கு வங்காள மாநில அரசு வட வங்காள மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை, அரசின் நலத்திட்டங்கள்  சாமானிய மக்களை சென்றடையவில்லை போன்ற  கோரிக்கைகளை வலியுறுத்தி பா.ஜ.க.வின்  இளைஞர் அமைப்பான பி.ஜே.எம். சிலிகுரியில் உத்தர்கன்யா என்ற பிரமாண்ட பேரணிக்கு ஏற்பாடு செய்து இருந்தது.

பா.ஜ.க. இளைஞர் அமைப்பின் தேசியத் தலைவராக உள்ள மக்களவை எம்.பி. தேஜஸ்வி சூர்யா உத்தர்கன்யா பேரணிக்கு சிலிகுரிக்கு வந்திருந்தார். இந்த பேரணியில் வட வங்காள பா.ஜ.க.வின் 7 எம்.பி.க்களும் கலந்து கொண்டனர். கட்சியின் இரு மாநில பொறுப்பாளர்களான கைலாஷ் விஜயவர்ஜியா மற்றும் அரவிந்த் மேனன், பா.ஜ.க. மாநிலத் தலைவர் திலீப் கோஷ் ஆகியோர் பேரணியில் கலந்து கொண்டனர்.

பா.ஜ.க. பேரணியைத் தடுத்து நிறுத்த போலீசார் தடுப்பு வேலிகளை அமைத்து இருந்தனர். தொண்டர்கள்  தடுப்புகளை உடைத்துக் கொண்டு செல்ல முயன்றனர். இதனால் போலீசாருக்கும், பா.ஜ.க. தொண்டர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதையடுத்து போலீசார் கண்ணீர்ப்புகை மற்றும் தண்ணீர் பீரங்கிகளை பயன்படுத்தினர். இதனால் சில தொண்டர்கள் அப்பகுதியில் அமைக்கப்பட்ட மூங்கில் தடுப்புகளுக்கு தீ வைத்தனர். இந்த மோதல்களில் பல பா.ஜ.க. தொண்டர்கள் காயம் அடைந்தனர்.

பா.ஜ.க. தொண்டர்  உலன் ராய் என்பவர் போலீஸ் தடியடியில் உயிர் இழந்ததாக மாநில தலைவர்  திலீப் கோஷ் குற்றம் சாட்டியுள்ளார். உலன்  ராய் கொடூரமாகத் தாக்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார் என்று கோஷ் கூறினார்.

இந்நிலையில், பா.ஜ.க. தொண்டர் பலியானதை கண்டித்து வட வங்காளத்தில் நாளை 12 மணி நேர பந்துக்கு பாஜக அழைப்பு விடுத்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com