தேர்தல் கமிஷனில் டி.டி.வி. தினகரன் அணி கூடுதல் ஆவணங்கள் தாக்கல்

டி.டி.வி.தினகரன் அணி சார்பில் தேர்தல் கமிஷனில் நேற்று கூடுதல் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன.
தேர்தல் கமிஷனில் டி.டி.வி. தினகரன் அணி கூடுதல் ஆவணங்கள் தாக்கல்
Published on

புதுடெல்லி:

டி.டி.வி.தினகரன் அணி சார்பில் தேர்தல் கமிஷனில் நேற்று கூடுதல் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன.

அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் (அ.தி.மு.க. அம்மா-புரட்சித்தலைவி அம்மா) ஆகியோர் அடங்கிய அணியினருக்கும், டி.டி.வி.தினகரன் அணியினருக்கும் இடையே போட்டி நிலவி வருகிறது. இவர்களில் யாருக்கு பலம் அதிகம் என்பதை அறிய, நிர்வாகிகளின் தற்போதைய பட்டியலை தேர்தல் கமிஷன் கேட்டிருந்தது.

இதற்கான காலக்கெடு கடந்த மாதம் 29-ந்தேதி முடிவடைந்தது. ஆனால் டி.டி.வி.தினகரன் 3 வார கால அவகாசம் கேட்டு தேர்தல் கமிஷனுக்கு கடிதம் அனுப்பினார். ஆனால் அந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. மேலும் எடப்பாடி பழனிசாமி அணியினர் தாக்கல் செய்த ஆவணங்களுக்கு மறுப்பு தெரிவிப்பதாக இருந்தால் 4-ந்தேதிக்குள் தெரிவிக்கலாம் என்றும் கூறி இருந்தது.

அதன்படி கடந்த 29-ந்தேதி இரு அணியினரும் கூடுதல் ஆவணங்களை சமர்ப்பித்தனர். அப்போது டி.டி.வி.தினகரன் அணியினர், தாங்கள் 4-ந்தேதிக்குள் மேலும் ஆவணங்களை சமர்ப்பிப்பதாக கூறினர். அதன்படி நேற்று டி.டி.வி. தினகரன் தரப்பு வக்கீல் ராஜா செந்தூர்பாண்டியன் டெல்லியில் தலைமை தேர்தல் கமிஷன் அலுவலகத்தில் கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்தார். மேலும் டி.டி.வி.தினகரன் தேர்தல் கமிஷனுக்கு எழுதிய புகார் மனு ஒன்றையும் சமர்ப்பித்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

தேர்தல் கமிஷனில் இதுவரை 2,140 ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளன. இதில், எத்தனை எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர் என்பதை சொல்ல முடியாது. 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டது

தொடர்பான வழக்கு நாளை (இன்று) ஐகோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது. எம்.எல்.ஏ.க்கள் தகுதி இழப்பை கருத்தில் கொள்ளக்கூடாது என்று தேர்தல் கமிஷனுக்கு ஐகோர்ட்டு அறிவுறுத்தி இருந்ததையும் தேர்தல் கமிஷனில் குறிப்பிட்டு இருக்கிறோம்.

எதிர் அணியினர் அளித்துள்ள ஆவணங்களில் பல ஆவணங்கள் போலியானவை. பலரை மிரட்டி கையொப்பம் பெறப்பட்டு உள்ளது. சத்தியப்பிரமாணம் செய்து வாக்குமூலம் கொடுத்தவர்கள் யார் யாரெல்லாம் தற்போது மாற்றிக் கொடுத்துள்ளார்களோ அவர்களிடம் குறுக்கு விசாரணை செய்தால்தான் உண்மை தெரியும்.

நாங்கள் தற்போது அளித்த கூடுதல் ஆவணங்களுக்கு முத்திரையிட்ட ஒப்புகைச்சீட்டு வழங்கப்பட்டு உள்ளது. எனவே அதை ஏற்றுக்கொண்டதாகவே நான் கருதுகிறேன். சேலத்தில் டி.டி.வி.தினகரன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை சட்டரீதியாக எதிர்கொள்ள நாங்கள் தயாராகி வருகிறோம். சசிகலா பரோலில் வெளியே வந்தால் சட்டத்துக்கு உட்பட்டுதான் செயல்படுவார்.

இவ்வாறு அவர் கூறினார். 

X

Maalai Malar
www.maalaimalar.com