மனைவிக்கு விடுமுறையை நீட்டிக்க கோரி அரசு ஊழியர் குடும்பத்துடன் தர்ணா

புதுவை கவர்னர் மாளிகை எதிரே மனைவிக்கு விடுமுறையை நீட்டிக்க கோரி அரசு ஊழியர் குடும்பத்துடன் தர்ணாவில் ஈடுபட்டார்.
மனைவிக்கு விடுமுறையை நீட்டிக்க கோரி அரசு ஊழியர் குடும்பத்துடன் தர்ணா
Published on

புதுச்சேரி:

புதுவை தேத்தாம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் முருகையன். பொதுப் பணித்துறையில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி பாலாம்பாள் (45). இவர், புதுவை நீதிமன்றத்தில் பல்நோக்கு ஊழியராக பணியாற்றி வருகிறார்.

பாலாம்பாளுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நிலை பாதிக்கப்பட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

இதனால் பாலாம்பாளுக்கு விடுப்பை நீட்டிக்க கோரி அவர் பணியாற்றும் நீதிபதி இல்லத்தில் அவரது கணவர் முருகையன் கேட்டு இருந்தார். ஆனால், அவர்கள் விடுமுறையை நீட்டிக்க மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் விடுமுறை அளிக்காததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாலாம்பாளின் கணவர் முருகையன் தனது 2 குழந்தைகள் மற்றும் உறவினருடன் புதுவை கவர்னர் மாளிகை எதிரே திடீர் தர்ணாவில் ஈடுபட்டார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பாலாம்பாளுக்கு விடுப்பை நீட்டிப்பு செய்ய வேண்டும், அவரை வேறு துறைக்கு பணி மாற்றம் செய்ய வேண்டும் என முருகையன் வலியுறுத்தினார்.

இதையடுத்து அங்கு வந்த பெரியக்கடை போலீசார் தர்ணாவில் ஈடுபட்ட முருகையனிடம் பேச்சுவார்த்தை நடத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர். #tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com