வங்கிக்குள் புகுந்து அரிவாள் வெட்டு- அமமுக பிரமுகரின் தந்தை உள்பட 2 பேர் கைது

வங்கிக்குள் புகுந்து 2 பேரை அரிவாளால் வெட்டிய சம்பவம் தொடர்பாக மேலும் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கைது
கைது
Published on

மானாமதுரை:

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் உள்ள அரசுடமை வங்கிக்குள் கடந்த புதன்கிழமை புகுந்த 4 பேர் கொண்ட கும்பல் அங்கு தங்கமணி என்பவரை சரமாரியாக அரிவாளால் வெட்டியது.

இதை தடுக்க சென்ற அவரது நண்பர் கணேசன் என்பவரும் அரிவாளால் வெட்டப்பட்டார். அப்போது வங்கி காவலாளி செல்ல நேரு தற்காப்புக்காக துப்பாக்கியால் சுட்டார். இதில் அரிவாளுடன் வந்த தமிழ்செல்வம் என்பவரின் காலில் குண்டடிபட்டு கீழே விழுந்தார். மற்ற 3 பேர் தப்பியோடினர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி. ரூபேஷ்குமார், சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ரோகித்நாதன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் சில மாதங்களுக்கு முன்பு மானாமதுரை அ.ம.மு.க. பிரமுகர் சரவணன் படுகொலையில் கைதாகி ஜாமீனில் வந்த தங்கமணியை பழிக்குப்பழி வாங்கும் வகையில் கொலை செய்ய கூலிப்படையை ஏவியது தெரியவந்தது.

காலில் குண்டு காயம் அடைந்த தமிழ்செல்வம் ஏற்கனவே கைது செய்யப்பட்டிருந்த நிலையில், மற்றவர்களை போலீசார் தேடி வந்தனர். இதனிடையே திருப்பாச்சேத்தி அருகே உள்ள சலுப்பனோடை பகுதியில் குற்றவாளி பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து போலீசார் அங்கு சென்று பதுங்கியிருந்த தங்கராஜ் என்பவரை நேற்று இரவு கைது செய்தனர். தமிழ்செல்வம், தங்கராஜ் கொடுத்த தகவலின்படி கொலையான அ.ம.மு.க. பிரமுகர் சரவணனின் தந்தை ஊமைத்துரையும் கைது செய்யப்பட்டார்.

இவர் மீது கொலைக்கு சதி திட்டம் தீட்டியது உள்பட பல்வேறு பதிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. தலைமறைவான கூலிப்படையை சேர்ந்த 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com