காரில் பிரியாணி விற்று மறுவாழ்வு தேடிய என்ஜினீயரிங் பட்டதாரிகள்

திருச்சியை சேர்ந்த என்ஜினீயரிங் பட்டதாரிகள் தனியார் நிறுவனங்களில் வேலை பார்த்து கொரோனாவால் பணியை இழந்து பிரியாணி வியாபாரத்தில் குதித்துள்ளனர்.
காரில் பிரியாணி  விற்பனை
காரில் பிரியாணி விற்பனை
Published on

திருச்சி:

கொரோனா வைரஸ் பொதுமக்களை உடல் அளவில் பாதிப்படைய செய்ததோடு, அவர்களின் வாழ்வாதாரமான தொழில்களையும் முடக்கியது. வெளியூர்களில் தனியார் நிறுவனங்களில் வேலை பார்த்த பலர் நோய் தொற்றில் இருந்து தப்ப தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பினர்.

5 மாதங்கள் கடந்து ஓடிய நிலையில் மீண்டும் பணி கிடைக்காமல் அவதிப்படுவோர், வேலை இழந்த பலர் மாற்று தொழிலை நாடி வருகிறார்கள். சென்னையில் வக்கீல் ஒருவர் தேனீர் விற்கும் நிலைக்கும், திருச்சியில் என்ஜினீயர் ஒருவர் இளநீர் விற்கும் நிலைக்கும் தள்ளப்பட்டனர்.

ஏற்கனவே செய்து கொண்டிருந்த வேலையை இழந்த ஏராளமானோர் இது போன்று மாற்று தொழிலில் இறங்கியுள்ளனர். அந்த வகையில் திருச்சியை சேர்ந்த என்ஜினீயரிங் பட்டதாரிகள் தனியார் நிறுவனங்களில் வேலை பார்த்து கொரோனாவால் பணியை இழந்து பிரியாணி வியாபாரத்தில் குதித்துள்ளனர். அதுபற்றிய விபரம் வருமாறு:-

திருச்சி வயலூர் ரோடு நாச்சிக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் (வயது 22). அதே பகுதியைச் சேர்ந்த சுபாஷ் சந்திரபோஸ் (26). இருவரும் என்ஜினீயரிங் பட்டதாரிகள்.

கொரோனா வைரஸ் பரவலுக்கு முன்பு திருச்சியில் உள்ள தனியார் நிறுவனங்களில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வந்தனர். பின்னர் கொரோனா ஊரடங்கால் அந்த நிறுவனம் இவர்கள் இரண்டு பேரையும் வேலையில் இருந்து நிறுத்தி விட்டது. வேலை பறிபோனதால் தொடர்ந்து சுமார் 3 மாத காலமாக வேறு வருமானமின்றி எதிர் காலத்தை எண்ணி கவலையுடன் இருந்தனர்.

மேலும் வாழ்வில் முன்னேற என்ன செய்யலாம் என சிந்தித்து கொண்டிருக்கும் போது, அவரது உறவினரான அண்ணாமலை என்பவர் நீங்கள் இருவரும் சேர்ந்து திருச்சியில் கார் மூலம் சாலையோரம் உணவு கடை நடத்துங்கள். அதற்கு நான் எனது பழைய காரை தருகிறேன் என்று கூறினார்.

என்ஜினீயரிங் பட்டதாரிகளும் அதனை ஏற்று பிரியாணி வியாபாரம் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்தனர். சுவை, மணத்துடன் பிரியாணியை வீட்டில் தயார் செய்து அதனை அந்த காரில் எடுத்து வந்தனர். பின்னர் வில்லியம்ஸ் ரோட்டில் உள்ள தியேட்டர் முன்பு கொட்டகை அமைத்து கார் பிரியாணி என்ற பெயரில் பிரியாணி வியாபாரம் செய்ய தொடங்கினர். இது குறித்து அவர்களிடம் கேட்ட போது அவர்கள் கூறியதாவது:-

கொரோனா ஊரடங்கு தொடங்கியபோது சாதாரணமாகத்தான் நினைத்தோம். ஆனால் இப்படி ஒட்டுமொத்த உலகத்தையும் உலுக்கும் என்று எண்ணவில்லை. எங்களை போன்ற எத்தனையோ இளைஞர்கள் வேலையை இழந்து தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

நாங்களும் பல நாட்கள் அதனை எண்ணி கவலையில் ஆழ்ந்தோம். அதன்பின்னர் எங்கள் குடும்பம் ஆறுதல் கூறியதோடு, பெரிய அளவில் ஆதரவும் அளித்தது. என்ஜினீயரிங் படித்து விட்டு, முதலில் கடை போட்டு வியாபாரம் செய்ய விருப்பம் இல்லை. அதுவும் காரில் சென்று பிரியாணி வியாபாரம் செய்தால் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஏளனமாக எண்ணுவார்களோ என நினைத்தோம். ஆனால் தற்போது நாள் ஒன்றுக்கு ரூ.5000 முதல் 6 ஆயிரம் வரை சம்பாதிக்கிறோம்.

இந்த பிரியாணி கடையை திறந்து 1 மாதம் ஆகிறது. தற்போது மக்கள் ஆதரவு தருகின்றனர். வியாபாரம் போக மீதமாகும் பிரியாணியை திருச்சி அரசு ஆஸ்பத்திரி அருகே ஆதரவில்லாமல் தவித்து கொண்டிருக்கும் மக்களுக்கும் ஆதரவற்ற இல்லத்தில் உள்ளவரும் மூதாட்டிகளுக்கும் தொடர்ந்து கொடுத்து வருகிறோம்.

தற்போது எங்கள் வாழ்க்கையை எதிர்கொள்ள நாங்கள் பயப்படவில்லை. கொரோனா எங்களுக்கு நல்ல வழிகாட்டி விட்டதாக கருதுகிறோம் என்று தெரிவித்தனர்.

பொதுமக்களும் ஏராளமானோர் என்ஜினீயரிங் பட்டதாரிகள் விற்பனை செய்யும் பிரியாணியை ஆர்வமுடன் வாங்கி, ருசித்தும், பாராட்டியும் செல்கிறார்கள்.

இவர்கள் வீட்டில் இருந்து தாங்களே பிரியாணியை தயார் செய்து அதற்கு தயிர் பச்சடி, சிக்கன் 65, கிரேவி, பாயாசம், முட்டை, லெக்பீஸ் ஆகியவை சேர்ந்து ரூ.130-க்கு விற்பனை செய்கின்றனர். மக்களின் ஆதரவு நாளுக்கு நாள் பெருகி வருகிறது. கொரோனா யாரின் வாழ்வாதாரத்தையும் பறிக்கவில்லை, நாம்தான் அப்படி நினைத்து தவிக்கிறோம். கொரோனா நாம் வாழ சிறந்ததொரு வழியை காட்டி சென்றுள்ளது என்பதற்கு இந்த என்ஜினீயரிங் பட்டதாரிகளின் முயற்சி ஒரு முன்னேற்ற படியாக மாறியுள்ளது என்பது நிதர்சனமான உண்மை.

X

Maalai Malar
www.maalaimalar.com