ஜெயலலிதா கூறிய தகவல்களை ஓ.பி.எஸ். விரைவில் வெளியிட வேண்டும்: தீபா

மறைந்த முதல்வர் ஜெயலலிதா கூறிய தகவல்களை ஓ.பன்னீர் செல்வம் விரைவில் வெளியிட வேண்டும் என தீபா வலியுறுத்தியுள்ளார்.
ஜெயலலிதா கூறிய தகவல்களை ஓ.பி.எஸ். விரைவில் வெளியிட வேண்டும்: தீபா
Published on

நீட் தேர்வால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த அரியலூர் மாணவி அனிதாவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறுவதற்காக எம்.ஜி.ஆர்., அம்மா தீபா பேரவை பொதுச் செயலாளர் தீபா இன்று அரியலூர் செல்கிறார். இதற்காக அவர் இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தார். திருச்சி விமான நிலையத்தில் அவரை பேரவை நிர்வாகிகள் வரவேற்றனர். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது நிருபர்கள், தினகரன் நடத்தும் பொதுக் கூட்டத்திற்கு அதிக அளவு கூட்டம் சேர்வது குறித்து கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த தீபா, தினகரனுக்கு சேரும் கூட்டம் பணத்தால் சேரும் கூட்டம் என்றார்.

இதே போல் முதல் - அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் விழா நடத்தி வருகிறார். நீங்கள் பொதுக்கூட்டம் நடத்துவது எப்போது? என்று கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர், மக்கள் கஷ்டப்பட்டு கொண்டிருக்கின்ற வேளையில் எடப்பாடி பழனிசாமி விழா நடத்தி வருகிறார். இதன்மூலம் மக்கள் வரிப்பணத்தை விரையப்படுத்தி வருகிறார். எங்கள் அணி சார்பில் விரைவில் பொதுக்கூட்டம் நடத்தப்படும். மக்கள் பிரச்சனைகளை முன்னெடுத்து சென்று போராடுவோம் என்றார்.


மேலும் அவர் கூறும் போது, சசிகலா குடும்பத்தின் சுய நலத்துக்காக ஆட்சியை கலைக்கக்கூடாது. இருப்பினும் சட்ட விரோதமாக ஆட்சியை நடத்தாமல் பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சியை நடத்த வேண்டும். மறைந்த முதல்வர் ஜெயலலிதா கூறிய தகவல்களை ஓ.பன்னீர் செல்வம் விரைவில் வெளியிட வேண்டும். எங்கள் அணியின் செயல்பாடுகளை சிலர் தவறாக சித்தரிக்கின்றனர். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவியில் இருந்து சசிகலா நீக்கப்பட்டது உண்மையாக இருக்குமானால் எடப்பாடி அணியுடன் இணைவது குறித்து முடிவு செய்யப்படும்.

X

Maalai Malar
www.maalaimalar.com