இரட்டை இலை எங்களுக்கு சட்டப்படி கிடைக்கும்: சி.ஆர்.சரஸ்வதி

இரட்டை இலை வழக்கில் சட்டப்படியும், நியாயப்படியும் வெற்றி எங்களுக்கே கிடைக்கும் என சி.ஆர்.சரஸ்வதி கூறியுள்ளார்.
இரட்டை இலை எங்களுக்கு சட்டப்படி கிடைக்கும்: சி.ஆர்.சரஸ்வதி
Published on

திருச்சியில் இன்று அ.தி.மு.க. அம்மா செய்தி தொடர்பாளரும், நடிகையுமான சி.ஆர்.சரஸ்வதி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தற்போது அ.தி.மு.க. அரசு மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் ஏற்படுத்தப்பட்ட அரசு. ஆனால் இப்போது பதவியில் உள்ளவர்கள் மக்களை பற்றி கவலைப்படாமல் தங்களது பதவியை காப்பாற்றிக்கொள்வதிலேயே உறுதியாக இருக்கிறார்கள்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா மத்திய அரசோடு இணக்கமாக இருந்து நிர்வாகத்தை நடத்தினாலும், தமிழக மக்களின் நலன் பாதிக்கும் எந்த திட்டம் என்றாலும் மத்திய அரசை எதிர்த்து அவர் குரல் கொடுப்பார். பிரதமரே முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவை வீடு தேடி வந்து பார்க்கும் அளவிற்கு மரியாதையோடு இருந்தார்.

ஆனால் இப்போது உள்ளவர்கள் மத்திய அரசிடம் மண்டியிட்டு கிடக்கிறார்கள். அவர்கள் யாரை பற்றியும் கவலைப்படாமல் பதவிக்காக அவர்களுக்குள்ளே சண்டை போட்டு கொள்கிறார்கள். அவர்களுக்குள் ஒற்றுமை இல்லை. நாங்கள் ஒற்றுமையாக இருக்கிறோம் என்று கூறி கொண்டும், அமைச்சரும், எம்.பி.யும் ராமநாதபுரத்தில் ஒரே மேடையில் மோதிக் கொண்டார்கள்.

சென்னையில் அமைச்சர் ஜெயக்குமாரும், மதுசூதனனும் ஒருவருக்கொருவர் மோதிக் கொள்கிறார்கள். இப்படி இருந்து கொண்டு நாங்கள் ஒற்றுமையாக இருக்கிறோம் என்று கூறுவது வேடிக்கையாக உள்ளது. அவர்கள் பதவிக்காக தர்ம யுத்தம் என்று கூறி நடத்தி இணைந்ததால் தான் இப்படி சண்டை போட்டு கொள்கிறார்கள்.


நாங்கள் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் லட்சியத்தை நிறைவேற்ற 100 ஆண்டுக்கும் மேலாக இந்த இயக்கம் இருக்கும் என்ற அவரது கனவை நிறைவேற்ற பாடுபட்டு வருகிறோம். நியாயமான எங்கள் தர்மயுத்தத்தில் இறுதியில் நாங்கள் வெற்றி பெறுவோம்.

இரட்டை இலை வழக்கில் சட்டப்படியும், நியாயப்படியும் வெற்றி எங்களுக்கே கிடைக்கும். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் கட்சியின் ஆட்சி மன்றக்குழு கூடி எடுக்கும் முடிவை பொதுச்செயலாளர் சசிகலா அறிவிப்பார். டி.டி.வி.தினகரன் போட்டியிட்டு வெற்றி பெறுவார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com