பசுக்களை கொன்றதாக நடவடிக்கை - 2 சிறுமிகள் கைது பற்றி விசாரணை நடத்த உத்தரவு

இறைச்சிக்காக பசுக்களை கொன்றது தொடர்பாக 2 சிறுமிகள் கைது செய்யப்பட்டது குறித்து விசாரணை நடத்த முசாபர் நகர் போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டுள்ளார். #MinorGirl #Arrest #Cow #Slaughter
பசுக்களை கொன்றதாக நடவடிக்கை - 2 சிறுமிகள் கைது பற்றி விசாரணை நடத்த உத்தரவு
Published on

மீரட்:

உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகர் அருகே உள்ள கதாவுலி பகுதியை சேர்ந்தவர் நஜிமுதீன். இவரது வீட்டில் போலீசார் சமீபத்தில் சோதனை நடத்தி அங்கிருந்த 1000 கிலோ மாட்டிறைச்சி மற்றும் கசாப்புக்கு பயன்படுத்தும் அரிவாள், கத்தி உள்ளிட்ட வற்றை பறிமுதல் செய்தனர்.

இறைச்சிக்காக பசுக்களை கொன்றதாக நஜிமுதீன் மனைவி, அவரது 12 மற்றும் 16 வயது மகள்கள், மேலும் 2 பெண்களை போலீசார் கைது செய்தனர். சிறுமிகள் 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர். மற்றவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

பசுக்களை கொன்றதாக பொய்யான குற்றச்சாட்டில் 2 சிறுமிகள் மற்றும் பெண்களை கைது செய்ததாகவும், அவர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும் என்று கோரி அந்த பகுதியை சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இது குறித்து அந்த பகுதியை சேர்ந்த சதாப் அகமது என்பவர் கூறும்போது, ‘இறைச்சிக்காக பசுக்களை கொன்றதற்கும், 2 சிறுமிகளுக்கும், பெண்களுக்கும் எந்த தொடர்பும் கிடையாது. அவர்கள் எதற்காக கைது செய்யப்பட்டார்கள் என்று தெரியவில்லை. சிறுமிகளின் கைகளில் விலங்கு போட்டு போலீசார் அழைத்து சென்றனர். சிறுமிகளை கைவிலங்கிட சட்டத்தில் இடமில்லை. போலீசார் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர்’ என்றார்.

இதைத் தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக முசாபர் நகர் போலீஸ் சூப்பிரண்டு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

அவர் கூறும்போது ‘இறைச்சிக்காக பசுக்களை கொன்றது தொடர்பாக 2 சிறுமிகள் கைது செய் யப்பட்டது குறித்து புகார் வந்துள்ளது. இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். கதாவுலிநகர் போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் இது குறித்து விசாரணை நடத்தப்பட்டுள்ளது’ என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com