

புதுடெல்லி:
சிக்கிம் எல்லை அருகே இந்தியா- சீனா-பூடான் நாடுகள் சந்திக்கும் முச்சந்திப்பான டோகாலாம் பகுதியில் சீன ராணுவம் மேற்கொண்ட சாலைப்பணிகளை இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தினர். இந்தியாவின் வடகிழக்கு பகுதிகளுக்கு ஏற்படும் பாதுகாப்பு அச்சுறுத்தலை கருத்தில் கொண்டு இந்திய ராணுவம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டது.
இதனால் இரு நாடுகளுக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டது. எல்லையில் இரு நாடுகளும் படைகளை குவித்து உள்ளன. இந்தியா தனது படைகளை வாபஸ்பெற வேண்டும் என சீனா மிரட்டல் விடுத்தது. இந்தியா, இருதரப்பும் தங்கள் ராணுவத்தை திரும்ப அழைக்க வேண்டும் என கூறியுள்ளது.
இந்த நிலையில், சீனாவுடன் டோகாலாம் பிரச்சனையை தூதரக ரீதியிலாக தீர்த்துக் கொள்ளும் முயற்சியில் இந்தியா ஈடுபட்டு உள்ளது. இவ்விவகாரத்தில் இருதரப்பும் ஏற்றுக் கொள்ளும் ஒரு தெளிவான தீர்வை காண இந்தியா மற்றும் பூடான் இணைந்து செயல்படுகிறது என வெளியுறவுத்துறை தெரிவித்து உள்ளது.
டோகாலாம் பகுதியில் இருந்து இந்தியா தன்னுடைய படை பலத்தை 400 வீரர்களில் இருந்து 40 வீரர்களாக குறைத்துவிட்டது என சீனா கூறியுள்ளது தொடர்பான கேள்விக்கு கோபால் பாக்லே நேரடியாக பதில் கூற மறுத்துவிட்டார். இந்தியாவின் நோக்கமானது அமைதியை அடைவதே, அது தூதரக வழியாக அடையப்படும் என்றார். டோக்லாம் விவகாரத்தில் பூடான் உடன் இந்தியா தொடர்ச்சியாக இணைந்து செயல்படுகிறது எனவும் அவர் கூறியுள்ளார்.