

திருவண்ணாமலை:
முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு இன்று மாலைமலர் நிருபரிடம் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
மத்திய அரசு ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தது. இந்த அறிவிப்பு வந்த உடன் தேசிய உடைமையாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள் தங்களிடம் உள்ள பழைய நோட்டுகளை உடனடியாக ரிசர்வ் வங்கியில் செலுத்தி புதிய ரூபாய் நோட்டுகளை பெற்றுக்கொண்டது.
ஆனால் தமிழகத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகள் இந்த பணங்களை மாற்ற நடவடிக்கை எடுக்க வில்லை. கூட்டுறவு வங்கியில் சுமார் ரூ.450 கோடி பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகள் தேக்கமடைந்துள்ளது. இதனை நபார்டு வங்கி கண்டு பிடித்துள்ளது. அந்த பணங்கள் அனைத்தும் கூட்டுறவு வங்கியில் உறுப்பினர்களாக உள்ள விவசாயிகள் மற்றும் நபார்டு வங்கி அளித்த பணம். மக்களின் பணம் தான் வீணாக போயுள்ளது. அந்த பணத்தை கூட்டுறவு துறை அதிகாரிகள் ஏன் மாற்ற நடவடிக்கை எடுக்கவில்லை. அந்த துறை அமைச்சராவது எதாவது முயற்சி செய்தாரா? அவர் என்ன நடவடிக்கை எடுத்துள்ளார்.
நபார்டு வங்கியிடம் பேசி பணத்தை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறுகின்றனர். கடன் கொடுப்பது மட்டும் தான் நபார்டு வங்கியின் வேலை. பணத்தை மாற்றுவதற்கும் நபார்டு வங்கிக்கும் சம்பந்தம் இல்லை.
ரிசர்வ் வங்கிதான் பணத்தை மாற்றும். கூட்டுறவு அதிகாரிகளின் மெத்தனப் போக்கால் பொதுமக்களின் பணம் வீணாகி போகியுள்ளது. உரிய காலத்திற்குள் பணத்தை மாற்றாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தேங்கியுள்ள சுமார் ரூ.450 கோடி பணத்திற்கு தீர்வுகாண தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கூட்டுறவு வங்கியில் சிறு, குறு விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்படும் என அரசு அறிவித்தது. ஆனால் அந்த நேரத்தில் கடன் தொகையை கட்டிய விவசாயிகள் பணம் வைப்புத் தொகையில் வைக்கப்பட்டு பின்னர் வழங்கப்படும் என்று அறிவித்தனர்.
ஆனால் அந்த பணத்தை விவசாயிகள் தற்போது கேட்டும் அதிகாரிகள் வழங்கவில்லை. அதனை திருப்பி வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.