தொடர் மழை: திருப்பதியில் கோடை காலத்திலும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாது

தொடர் மழையால் 5 அணைகளில் 70 சதவீதம் தண்ணீர் நிறைந்துள்ளதால், திருப்பதியில் கோடை காலத்தில் கூட தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாது என்று தேவஸ்தான என்ஜினீயர்கள் தெரிவித்தனர்.
தொடர் மழை: திருப்பதியில் கோடை காலத்திலும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாது
Published on

திருமலை:

திருப்பதி மற்றும் திருமலை பகுதியில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று மதியம் தொடங்கிய மழை இன்று காலை வரை பெய்து கொண்டே இருந்தது. இதனால் தரிசனத்துக்கு வந்த பக்தர்கள் அவதியடைந்தனர்.

தொடர் மழையால் திருப்பதி பகுதியில் உள்ள குளங்கள், குட்டைகள், ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன.

திருமலையில் உள்ள கோகர்ப்பம், குமாரதாரா, பசுபுதாரா, ஆகாசகங்கை, பாபவிநாசனம் ஆகிய அணைகளும் நிரம்பி வருகின்றன. இந்த அணைகளில் சராசரியாக 70 சதவீதம் தண்ணீர் நிறைந்துள்ளது.

மேலும் திருப்பதி அருகே உள்ள கல்யாணி அணையிலும் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது. கல்யாணி அணையில் இருந்து திருமலைக்கு குழாய்கள் மூலம் தினமும் தண்ணீர் கொண்டு வந்து தேவஸ்தான விடுதிகள், கல்யாண கட்டாக்கள், அன்னதானக்கூடம், உள்ளூர் மக்கள் வசிக்கும் பாலாஜிநகர், தேவஸ்தான ஊழியர்கள் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்புகள் ஆகியவற்றுக்கு தட்டுப்பாடு இல்லாமல் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

திருமலையில் 1963-ம் ஆண்டு கோகர்ப்பம் அணை கட்டப்பட்டது. அதில் 2,840 லட்சம் கியாலன் தண்ணீரை தேக்கி வைக்கலாம். அதில், தற்போது பரவலாக பெய்து வரும் மழையால் 45 சதவீதம் தண்ணீர் நிறைந்துள்ளது. 1983-ம் ஆண்டு பாபவிநாசனம் அணை கட்டப்பட்டது. அதில் 5,840 லட்சம் கியாலன் தண்ணீரை தேக்கி வைக்கலாம். அதில், தற்போது 75 சதவீதம் தண்ணீர் நிறைந்துள்ளது.

2003-ம் ஆண்டு ஆகாசகங்கை அணை கட்டப்பட்டது. அதில் 670 லட்சம் கியாலன் தண்ணீரை தேக்கி வைக்கலாம். அதில், தற்போது 90 சதவீதம் தண்ணீர் நிறைந்துள்ளது. 2010-ம் ஆண்டு குமாரதாரா மற்றும் பசுபுதாரா என்ற அணைகள் கட்டப்பட்டன. அதில் குமாரதாரா அணையில் 3,224.83 லட்சம் கியாலன் தண்ணீரை தேக்கி வைக்கலாம். அதில் தற்போது 72 சதவீதம் தண்ணீர் நிறைந்துள்ளது. அதேபோல், பசுபுதாரா அணையில் 1,896 லட்சம் கியாலன் தண்ணீரை தேக்கி வைக்கலாம். அதில் தற்போது 72 சதவீதம் தண்ணீர் நிறைந்துள்ளது.

இதற்கிடையே திருப்பதி அருகே உள்ள கல்யாணி அணையில் இருந்து தினமும் 15 முதல் 20 லட்சம் கியாலன் தண்ணீர் குழாய்கள் மூலம் திருமலைக்கு கொண்டு வரப்படுகிறது. மொத்த தண்ணீரும் திருமலையில் சுமார் 248 நாட்களுக்கு பயன்படுத்தலாம். கோடை காலத்தில் கூட தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாது என்று திருமலை-திருப்பதி தேவஸ்தான என்ஜினீயர்கள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com