

மும்பை:
மகாராஷ்டிராவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து பெய்து வருகிறது. பெரு மழை காரணமாக ரத்னகிரி மாவட்டத்தின் சிப்லுன் தாலுகாவில் திவாரே என்ற அணை உடைந்து அருகில் உள்ள கிராமங்களை தண்ணீர் சூழ்ந்தது. அந்த கிராமங்களை சேர்ந்த 12 வீடுகளை வெள்ளம் அடித்து சென்றது. வெள்ளத்தில் சிக்கி 23 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த மகாராஷ்டிரா நீர்வளத்துறை அமைச்சர் தனஜீ சவந்த், ரத்னகிரியில் உள்ள அணைக்கட்டினை நண்டுகள் அரித்து பலவீனப்படுத்தி விட்டதாகவும், இதன் காரணமாகவே அணையில் உடைப்பு ஏற்பட்டு உயிரிழப்பு நிகழ்ந்ததாகவும் சர்ச்சைக்குரிய வகையில் கருத்தினை தெரிவித்தார்.
இந்நிலையில், அம்மாநில தேசியவாத காங்கிரஸ் கட்சியின் இளைஞரணி தலைவர் ஜிதேந்திர அவ்கட் தலைமையிலான தொண்டர்கள் இணைந்து கோலாப்பூரில் உள்ள காவல் நிலையத்துக்கு நண்டுகளுடன் வந்தனர். மேலும், ரத்னகிரியில் உள்ள அணைக்கட்டு நண்டுகள் அரித்து உடைப்பு ஏற்பட்டதாக மாநில நீர் வளத்துறை அமைச்சர் கருத்து தெரிவித்துள்ளார். ஆகையால் தாங்கள் கொண்டு வந்த நண்டுகள் மீது கொலை வழக்குப்பதிவு செய்து அவற்றை உடனடியாக கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என புகார் மனு அளித்தனர்.
காவல் நிலையத்துக்குள் நண்டுகளோடு சென்று அவற்றை சிறையில் அடைக்க வேண்டும் என தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் புகார் அளித்தது அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.