

புதுடெல்லி:
பிரான்ஸ் நாட்டின் டசால்ட் நிறுவனத்திடம் இருந்து ரூ.58 ஆயிரம் கோடிக்கு 36 ரபேல் போர் விமானங்களை கொள்முதல் செய்ய 2016-ம் ஆண்டு இந்திய அரசு ஒப்பந்தம் செய்தது. அந்த ஒப்பந்தத்தின்படி பிரான்சில் இருந்து ஏற்கனவே 23 ரபேல் விமானங்களை இந்தியா பெற்றுள்ளது. 36 ரபேல் போர் விமானங்களும் 2022 ஏப்ரல் மாதத்திற்குள் இந்தியாவிடம் வழங்கப்படும் என்று டசால்ட் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ரபேல் போர் விமான கொள்முதல் ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்திருப்பதாக காங்கிரஸ் கட்சி தொடர்ந்து குற்றம்சாட்டிவருகிறது. ரபேல் ஒப்பந்தம் குறித்து பாராளுமன்ற கூட்டு குழு விசாரணை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்திவருகிறது. இந்த ஒப்பந்தம் தொடர்பான பொதுநல வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், ஒப்பந்தத்தில் எந்தத் தவறும் நடைபெறவில்லை என்று 2019 நவம்பரில் தீர்ப்பு கூறியது.
இந்நிலையில், ரபேல் ஒப்பந்தத்துக்காக இந்தியாவை சேர்ந்த இடைத்தரகர் ஒருவருக்கு ரூ.9 கோடிக்கு மேல் லஞ்சம் கொடுக்கப்பட்டதாக பிரான்ஸ் நாட்டு ஆன்லைன் செய்தி நிறுவனம் சமீபத்தில் செய்தி வெளியிட்டிருந்தது. இதை தொடர்ந்து ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் முழுமையான விசாரணை வேண்டும் என்றும் இது குறித்து பிரதமர் மோடி விளக்கம் அளிக்கவேண்டும் என்றும் காங்கிரஸ் வலியுறுத்திவருகிறது.
ரபேல் ஒப்பந்த ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று பிரான்ஸ் பொது வழக்கு சேவைகளின் (பி.என்.எப்) நிதிக் குற்றப்பிரிவு தெரிவித்து இருந்தது. அதன்படி, விசாரணை நடத்த தனி நீதிபதி நியமிக்கப்பட்டுள்ளார்.
மீடியாபார்ட் பத்திரிகை மேற்கொண்ட தொடர்ச்சியான விசாரணைகள் மற்றும் அதைத் தொடர்ந்து பிரான்ஸ் தன்னார்வ தொண்டு நிறுவனமான ஷெர்பா அளித்த புகாரைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. முன்னதாக ஷெர்பா அளித்த இதேபோன்ற புகாரை பி.என்.எப். 2018-ல் நிராகரித்திருந்தது.
ரபேல் ஒப்பந்தம் செய்யப்பட்டபோது பிரான்ஸ் ஜனாதிபதி பதவியில் ஹாலண்டே இருந்தார், தற்போதைய ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் ஹாலண்டே மந்திரிசபையில் பொருளாதாரம் மற்றும் நிதி மந்திரியாக இருந்தார்.
பிரான்சில் விசாரணை தொடங்க உள்ள நிலையில், போர் விமானங்களை கொள்முதல் செய்ததில் நடந்த ஊழல் தொடர்பான உண்மையை கண்டறிவதற்கு பாராளுமன்ற கூட்டுக் குழு விசாரணைதான் ஒரே வழி என்றும், விசாரணைக்கு பிரதமர் உத்தரவிட வேண்டும் என்றும் காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது.
ரபேல் ஒப்பந்தம் தொடர்பான ஊழல் குற்றச்சாட்டை பிரெஞ்சு அரசாங்கம் ஏற்றுக்கொண்டபோது, ஊழல் நடந்த நாட்டில் பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்தப்பட வேண்டாமா? என காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா கேள்வி எழுப்பினார்.