

முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் அகில இந்திய காங்கிரஸ் கட்சியில் செயற்குழு உறுப்பினராகவும், மாநில செயற்குழு உறுப்பினராகவும் இருந்து வருகிறார்.
இவர் மீது சட்டவிரோத பணப்பரிவர்த்தனை செய்ததாக மத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்திற்கு அன்னிய முதலீடு பெற்றுக் கொடுத்ததில் இவர் முறைகேடு செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டது. இதையெடுத்து கார்த்தி சிதம்பரம் மீது சட்ட விரோத பணப்பரிமாற்றம் சட்டம் மற்றும் பணப்பரிமாற்ற முறைகேடு தடுப்பு சட்டம் ஆகியவற்றின் கீழ் விசாரணை நடந்து வந்தது.
கடந்த மாதம் சி.பி.ஐ. அதிகாரிகளும், அமலாக்கத்துறை அதிகாரிகளும் கார்த்தி சிதம்பரத்திற்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகங்களில் அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது பணப்பரிமாற்ற முறைகேட்டை உறுதிபடுத்துவதற்கான ஆவணங்கள் கிடைத்ததாக தகவல்கள் வெளியானது.
அந்த ஆவணங்களின் அடிப்படையில் கடந்த 15-ந்தேதி சி.பி.ஐ. அதிகாரிகளும், அமலாக்கத்துறை அதிகாரிகளும் கார்த்தி சிதம்பரத்தை டெல்லிக்கு வரவழைத்து விசாரணை நடத்தினார்கள். சுமார் 10 மணிநேரம் இந்த விசாரணை நடந்தது.
இதையடுத்து அவரது வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன. அடுத்தக்கட்டமாக கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்படலாம் என்று பரபரப்பு தகவல் வெளியானது.
இந்த நிலையில் கடந்த 16-ந்தேதி கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கரராமன் கைது செய்யப்பட்டார்.
இதனால் கார்த்தி சிதம்பரம் முன்ஜாமீன் கோரி மனு செய்தார். ஆனால் கோர்ட்டு அவருக்கு முன்ஜாமீன் வழங்க மறுத்து விட்டது. என்றாலும் அவர் வெளிநாடு செல்ல தடையில்லை என்று கோர்ட்டு அறிவித்தது.
10 தினங்களுக்கு முன்பு கார்த்தி சிதம்பரம் லண்டன் சென்றார். 10 நாட்களும் அவர் அங்கே தங்கி இருந்தார். இன்று காலை அவர் பிரிட்டீஸ் ஏர்வேஸ் விமானத்தில் சென்னை திரும்பினார்.
சென்னை விமான நிலையத்தில் அவரை காலை 8 மணிக்கு சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர். அவரை வேறு எங்கும் செல்ல அவர்கள் அனுமதிக்கவில்லை. விமான நிலையத்தில் வைத்தே அவரிடம் விசாரணை நடந்தது.
இதையடுத்து கார்த்தி சிதம்பரத்தை டெல்லிக்கு அழைத்து செல்ல சி.பி.ஐ. அதிகாரிகள் முடிவு செய்தனர். 10.40 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்ட விமானத்தில் அவரை ஏற்றி டெல்லிக்கு அழைத்து சென்றனர்.
டெல்லியிலும் அவரிடம் விசாரணை நடைபெற உள்ளது. அதன்பிறகு இன்று பிற்பகல் பாட்டியாலா ஹவுஸ் கோர்ட்டில் அவர் ஆஜர்படுத்தப்பட உள்ளார். காவலில் எடுத்து விசாரித்த பிறகு அவர் மீது எடுக்கப்படும் நடவடிக்கை பற்றிய விவரம் தெரிய வரும்.
கார்த்தி சிதம்பரத்தை முதலில் சென்னையில் உள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்ய சி.பி.ஐ. அதிகாரிகள் திட்டமிட்டு இருந்தனர். ஆனால் வீட்டில் கைது செய்யப்படும் போது கார்த்தி சிதம்பரம் ஆதரவாளர்களால் பிரச்சினை ஏற்படக்கூடும் என்று கருதினார்கள்.
இதனால்தான் கார்த்தி சிதம்பரம் வெளிநாட்டில் இருந்து திரும்பும் போது விமான நிலையத்தில் வைத்து கைது செய்ய முடிவு செய்தனர். அதன்படி இன்று காலை கார்த்தி சிதம்பரத்தை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர்.
கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய சி.பி.ஐ. அதிகாரிகளும், அமலாக்கத்துறை அதிகாரிகளும் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டு இருப்பதை கடந்த சில தினங்களாக அவரது குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்கள் அறிந்திருந்தனர். கார்த்தி சிதம்பரத்தின் தந்தை ப.சிதம்பரம் தங்கள் குடும்பத்தின் கண்ணியத்தை குறைக்கும் வகையில் சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் செயல்படுவதாக சுப்ரீம் கோர்ட்டில் மனு செய்தது குறிப்பிடத்தக்கது.
கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்பட்ட தகவல் அறிந்ததும் அவரது ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். சென்னையில் உள்ள அவரது வீட்டில் அவர்கள் திரண்டனர்.