

புதுடெல்லி:
பா.ஜ.க.வின் பாராளுமன்ற குழு கூட்டம் டெல்லியில் இன்று மாலை நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி, பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா உள்பட முக்கிய தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
மூன்று மாநில தேர்தல் முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து பா.ஜ.க. தலைமை அலுவலகம் வந்தார் பிரதமர் மோடி. அங்கு வந்த பிரதமர் மோடிக்கு கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இந்த கூட்டத்துக்கு பின்னர் அங்கு குழுமியிருந்த பா.ஜ.க. தொண்டர்கள் இடையே பிரதமர் மோடி பேசியதாவது:-
தேர்தல்களில் கிடைத்த வெற்றியை, தன்னுயிரை கொடுத்து உழைத்த பா.ஜ.க. தொண்டர்களுக்கு காணிக்கையாக்குகிறோம். பா.ஜ.க. தொண்டர்களின் அயராத உழைப்பால்தான் இந்த வெற்றி சாத்தியமானது.
பா.ஜ.க. வெற்றியை குறைத்து மதிப்பிட சிலர் நினைக்கிறார்கள். எல்லா வண்ணங்களும் காவியாக மாறிவிட்டது என்பதே உண்மை. பா.ஜ.க.வின் தேர்தல் வெற்றிக்கு பிரபலங்கள் தேவையில்லை, இளைஞர்கள் போதும்.
சூரியன் மறையும்போது சிகப்பு வண்ணத்தில் இருக்கும், ஆனால் அது உதிக்கும் போது காவி நிறத்தில்தான் இருக்கும். வடகிழக்கு மாநிலங்கள் இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல முன்வந்துள்ளன.
வரும் ஜூன் மாதத்துக்கு பிறகு, காங்கிரஸ் கட்சியின் சார்பில் முதல் மந்திரி என்ற பெயரில் புதுச்சேரி முதல் மந்திரி நாராயணசாமி மட்டுமே நீடிப்பார்.
காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவி உயர்ந்துள்ளது. ஆனால் அந்த கட்சி தொடர் தோல்வியினால் வரலாறு காணாத கடும் சரிவை சந்தித்துள்ளது.
இவ்வாறு அவர் பேசினார். # tamilnews