

மதுரை:
நோய் தொற்றினை தவிர்ப்பதற்காக மத்திய - மாநில அரசுகள் ஊரடங்கு உத்தரவை அறிவித்து உள்ளன. மதுரை மாட்டுத்தாவணி ஒருங்கிணைந்த நெல் வணிக வளாகத்தில் உள்ள மலர் சந்தை செயல்படவில்லை. இதனால் மலர் சாகுபடி செய்யும் விவசாயிகள் மற்றும் வணிகர்கள் வேதனை அடைந்தனர்.
பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு மாட்டுத்தாவணி ஒருங்கிணைந்த நெல் வணிக வளாகத்தில் இருக்கும் மலர் சந்தை தற்காலிகமாக இன்று (15ந்-தேதி முதல் மதுரை ஆரப்பாளையம் பஸ் நிலையம், ரேஸ்கோர்ஸ் மைதானம், ஈ.வெ.ரா. நாகம்மையார் பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகிய 3 இடங்களில் மட்டும் செயல்பட உள்ளது.
இங்கு விவசாயிகள் மலர்களைக் கொண்டு வந்து விற்பனை செய்யவும், வணிகர்கள் மலர்களை கொள்முதல் செய்து விற்கவும் காலை 6 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது.
ஆனாலும் இதில் ஒரு சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஒவ்வொரு கடைகளிலும் பூக்கள் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். வியாபாரிகள் மற்றும் பூக்கள் வாங்குபவர்கள் அனைவரும் கவசம் அணிய வேண்டும்,
ஒவ்வொரு பூக்கடைகளுக்கும் இடையே அதிக இடைவெளி இருக்க வேண்டும். பூக்கள் வாங்க வருபவர்கள் ஒரு மீட்டர் சமூக இடைவெளிவிட்டு இருக்குமாறு கலெக்டர் வினய் அறிவுறுத்தி உள்ளார்.