

திருப்பூர்:
திருப்பூர் மாவட்ட கலெக்டர் பழனிசாமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகைக்கு முதல் நாளில் ‘போகிப்பண்டிகை’ கொண்டாடப்படுகிறது. அன்று பழைய பொருட்களை எரிப்பதென்பது ‘பழையன கழிதல்” என்ற வழக்கத்திற்கான அடையாளமாகும்.
இந்த நாளில் கிழிந்த பாய்கள், பழைய துணிகள், தேய்ந்த துடைப்பங்கள், தேவையற்ற விவசாய கழிவுகள் ஆகியவற்றைத் தீ வைத்து எரிப்பார்கள். பெரும்பாலும் நமது கிராமங்களில் கடைபிடிக்கப்படும் இந்த பழக்கம் சுற்றுச்சூழலுக்கு பெரும் தீமையை ஏற்படுத்தாது.
ஆனால் தற்போது போகியன்று மக்கள் நெருக்கம் மிகுந்த திருப்பூர் போன்ற நகரங்களில் டயர், ரப்பா, பிளாஸ்டிக் பின்னலாடை உற்பத்தி தொழிற்சாலைகளில் கழிவுப்பொருட்களாக வெளியேற்றக்கூடிய பேக்கேஜிங் பிளாஸ்டிக் உறைகள், எம்பிராய்டரி தொழிற்சாலைகளில் வெளியேற்றக்கூடிய திடக்கழிவுகள், போம் போன்ற கழிவுகள், பழைய மின்சார ஒயர்களில் இருந்து காப்பர் போன்ற பொருட்களை பிரித்து எடுப்பதற்காக சாலை ஓரங்களிலும், போக்குவரத்து நெரிசல் நிறைந்த பகுதிகளுக்கு அருகாமையிலும், பள்ளி, மருத்துவமனைகள், குடியிருப்புகளுக்கு அருகாமையிலும் திறந்த வெளியில் எரித்தல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
போகியன்று டயர் போன்ற பொருட்கள் எரிக்கும் போது நைட்ரஜன் ஆக்சைடு, சல்பர் டையாக்சைடு போன்ற நச்சுப்புகைகளும், பிளாஸ்டிக் மற்றும் பி.வி.சி. போன்றவற்றை எரிக்கும்போது ஹைட்ரஜன் சயனைடு, வினைல் குளோரைடு போன்ற நச்சுப்புகைகளும் வெளிப்படுகிறது.
இவ்வாறு வெளிப்படும் நச்சுப்புகைகளை சுவாசிக்கும் போது கேன்சர், சுவாசக்கோளாறு, ஆஸ்துமா, கண், மூக்கு எரிச்சல் உட்பட பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகின்றன. நச்சுக்காற்றாலும், கரிப்புகையாலும் காற்று மாசுபட்டு நம் நகரமே கருப்பு நகரமாக மாறும். நச்சுப்புகை கலந்த பனி மூட்டத்தால் சாலை போக்குவரத்து தடை மற்றும் விபத்து ஏற்படும். நாளடைவில் இந்த செயல்களால் காற்று மண்டலத்தில் ஆக்சிஜன் அளவு குறைந்து சுவாசிக்கும் காற்றில் நச்சுப்புகைகளின் அளவு அதிகரித்து மக்களின் ஆரோக்கியம் குறைந்து நீண்ட நாள் நோய்வாய்ப்படும் நிலை ஏற்படும்.
எனவே, இது போன்ற செயல்களின் மூலம் காற்றை மாசுபடுத்துவது சட்டப்படி குற்றமும், சமுதாயத்திற்கு இழைக்கும் தீங்கும் ஆகும். இதனை மீறுபவர்கள் மீது காவல்துறை மூலமாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். எனவே திருப்பூர் மாவட்ட மக்கள் நலனில் அக்கறையோடு அனைவரும் நச்சுப்புகையற்ற போகி கொண்டாட உறுதியேற்க வேண்டும். போகிப் பண்டிகையன்று டயர், ரப்பர், பிளாஸ்டிக் மற்றும் செயற்கைப் பொருட்களை எரிக்கவேண்டாம்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.