

கோவை:
ஜி.எஸ்.டி.யில் இருந்து விலக்கு உள்பட கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் சார்பில் 2 நாள் வேலைநிறுத்தப் போராட்டம் நேற்று தொடங்கியது.
இந்த போராட்டத்துக்கு கோவை மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்கம் ஆதரவு தெரிவித்தது. இந்த சங்கத்துக்குட்பட்ட 2500 லாரிகள் ஓடவில்லை.
வெளிமாநிலங்களுக்கு இயக்கப்படும் லாரிகள் உக்கடம் லாரி பேட்டையில் நிறுத்தப்பட்டிருந்தன.
இன்று 2-வது நாளாக வேலைநிறுத்தப் போராட்டம் நீடித்தது. கோவையில் இருந்து மோட்டார் வாகன உதிரி பாகங்கள் மகாராஷ்டிரா, பஞ்சாப் மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். லாரி ஸ்டிரைக் காரணமாக உதிரி பாகங்கள் அனுப்பப்பட வில்லை.
போராட்டம் காரணமாக கோவை மாவட்டத்தில் மட்டும் ரூ.200 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
அதேநேரம் காய்கறிகள், பால், பழங்கள், குடிநீர், ரேஷன் பொருட்கள், மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை ஏற்றி செல்லும் லாரிகள் வழக்கம் போல இயங்கின. இதனால் அத்தியாவசிய பொருட்களின் வினியோகத்தில் எந்த பாதிப்பும் இல்லை.
திருப்பூர் மாவட்டத்தில் 8 ஆயிரம் லாரிகள் 2-வது நாளாக இயக்கப்படவில்லை. இதனால் வெளிமாநிலங்களுக்கு துணிமணிகள் அனுப்பும் பணி முடங்கியது. 2 நாளில் மட்டும் ரூ.300 கோடி வர்த்தம் முடங்கியதாக லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்தனர்.