விபத்தில் சாப்ட்வேர் என்ஜினீயர் பலி: அமைச்சர்-தி.மு.க. எம்.எல்.ஏ. பரபரப்பு குற்றச்சாட்டு

கோவையில் விபத்தில் சாப்ட்வேர் என்ஜினீயர் பலியான சம்பவத்துக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் தி.மு.க. எம்.எல்.ஏ பரபரப்பான குற்றச்சாட்டுக்களை கூறியுள்ளனர்.
விபத்தில் சாப்ட்வேர் என்ஜினீயர் பலி: அமைச்சர்-தி.மு.க. எம்.எல்.ஏ. பரபரப்பு குற்றச்சாட்டு
Published on

கோவை:

கோவை சின்னியம்பாளையத்தை அடுத்த ஆர்.ஜி.பு தூரை சேர்ந்தவர் ரகுபதி (வயது 32).

அமெரிக்காவில் சாப்ட்வேர் என்ஜினீயராக பணியாற்றிய இவர் கடந்த 10 நாட்களுக்கு முன்பு விடுமுறையில் ஊருக்கு வந்தார்.

இவர் கடந்த 25-ந்தேதி அதிகாலை 2 மணிக்கு பழனி கோவிலுக்கு செல்வதற்காக சிங்காநல்லூர் பஸ் நிலையத்துக்கு மோட்டார் சைக்கிளில் சென்ற போது அரசு மருத்துவ கல்லூரி அருகே விபத்தில் பலியானார். அங்கு அமைக்கப்பட்டிருந்த வரவேற்பு வளைவில் மோதி கீழே விழுந்ததாகவும், அப்போது அந்த வழியாக வந்த லாரி மோதி அவர் இறந்து விட்டார் என்றும் கூறப்பட்டது.

போலீஸ் விசாரணையில் அவ்வழியாக ஒரு வழிப்பாதையில் வந்த லாரி மோதி சக்கரத்தில் மாட்டி தலை நசுங்கி ரகுபதி பலியானது தெரிய வந்தது. லாரி டிரைவரான ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த மோகன்(31) என்பவரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

இந்நிலையில் ஹோப் காலேஜ் பகுதியில் என்ஜினீயர் ரகுபதியை கொன்றது யார்? என்ற அர்த்தம் வரும் வகையில் கேள்விக்குறி வரைந்து ஆங்கிலத்தில் எழுதி இருந்தனர். இது இந்த பிரச்சனையை மேலும் பெரிதாக்கி உள்ளது.

சமூக வலை தளங்களில் ரகுபதி படத்துடன் இந்த வாசகங்கள் மற்றும் அலங்கார வளைவுகளை உள்ளடக்கிய வீடியோ காட்சிகள் வேகமாக பரவி வருகிறது. இது பரபரப்பை ஏற்படுத்தியது.

இதற்கிடையே அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நிருபர்களிடம் பேட்டி அளித்த போது கூறியதாவது:-

என்ஜினீயர் ரகுபதி இறந்தது மனிதாபிமான அடிப்படையில் எல்லோருக்கும் வருத்தம் அளிக்க கூடியது. ஆனால் அதை வைத்து சிலர் திசை திருப்புவதாக தெரிகிறது. கடந்த 2 மாதத்துக்கு முன்பு ஒரு தனியார் தொலைக்காட்சியில் என் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை என்று தகவல் பரப்பப்பட்டது. அந்த தகவலை சிங்காநல்லூர் தி.மு.க. எம்.எல்.ஏ. கார்த்திக் உள்பட சிலர் தான் பரப்பினார்கள். இதில் முழுமையான உள்நோக்கம் இருக்கிறது. இந்த விபத்தையும் இரண்டு விதமாக திரித்து கூறினார்கள்.

பலியான ரகுபதி எனது உறவினர் குடும்பத்தை சேர்ந்தவர் தான். முதலில் அந்த விபத்து பற்றிய தகவல் கிடைத்ததும் அதுபற்றி முழுமையாக விசாரிக்க கூறியிருந்தேன். இந்த விபத்தினால் ஒரு குடும்பம் வேதனையில் இருக்கிறது. இந்த பிரச்சனையை திசை திருப்பி காழ்ப்புணர்ச்சியோடு சிலர் செயல்படுகிறார்கள்.

விபத்து தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து லாரி டிரைவரை கைது செய்துள்ளனர். அந்த லாரி டிரைவர் ஒரு வழிப்பாதையில் நீண்ட தூரம் வந்து மோதி விட்டு நிற்காமல் சென்றுள்ளார். விபத்தை ஏற்படுத்திய லாரியின் நிறுவனத்தை திடக்கழிவு மேலாண்மை திட்டத்துக்காக கோவை மாநகராட்சியோடு ஒப்பந்தம் போடப்பட்டது நா.கார்த்திக் துணைமேயராக இருந்த போது தான்.

கார்த்திக் எம்.எல்.ஏ. என்ன உள்நோக்கத்தோடு செயல்படுகிறார் என்று தெரியவில்லை. லாரி டிரைவருக்கு ஏன் ஆதரவு தெரிவிக்கிறார் என்று எங்களுக்கு தெரிய வேண்டும். இந்த பிரச்சனையை நாங்கள் சாதாரணமாக விடமாட்டோம். என்ஜினீயர் ரகுபதி சரியான பாதையில் தான் வந்துள்ளார்.

லாரி டிரைவர் தான் தவறாக ஒருவழிபாதையில் எதிர்திசையில் வந்துள்ளார். அவர் பிரேக்கே பிடிக்கவில்லை. தி.மு.க. எம்.எல்.ஏ. இந்த விபத்தை உள்நோக்கத்தோடு அரசியலாக்குகிறார். இதே போன்று அவர் தொடர்ந்து செயல்பட்டால் நா.கார்த்திக் எம்.எல்.ஏ. மீது வழக்கு தொடருவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

அமைச்சரின் புகாருக்கு பதில் அளித்து நா.கார்த்திக் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-

என்ஜினீயர் ரகுபதி ஹோப் காலேஜ் அருகே வைக்கப்பட்டிருந்த அலங்கார வளைவில் மோதி கீழே விழுந்துள்ளார். அதன்பிறகு தான் அவர் மீது லாரி ஏறி உள்ளது. இதுகுறித்து சமூக வலைதளங்களில் வந்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டேன். மேலும், விபத்து ஏற்படுத்திய அலங்கார வளைவை அகற்ற வேண்டும் என மாநகர போலீஸ் கமி‌ஷனரிடம் புகார் அளித்தேன்.

ஆனால் அமைச்சர் வேலுமணி விபத்தை வேறு விதமாக திசை திருப்புகிறார். இந்த விபத்துக்கு கோவையில் நடைபெற உள்ள எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வைக்கப்பட்ட அலங்கார வளைவு தான் காரணம்.

6 வழிச்சாலையான அதில் வாகனங்கள் செல்வதற்கு சிரமம் ஏற்படும் வகையில் அலங்கார வளைவுகள் வைக்கப்பட்டிருந்தன. எனவே உயிரிழந்த என்ஜினீயரின் குடும்பத்துக்கு தகுந்த இழப்பீடு வழங்க வேண்டும். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக நான் தவறான தகவலை கூறுவதாகவும், இதனால் என் மீது வழக்கு தொடர்ந்தால் அதை நான் சந்திக்க தயார். இந்த சம்பவம் தொடர்பாக தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளோம். அவரிடம் அனுமதி பெற்று போராட்டங்களை நடத்துவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com