

வடவள்ளி:
கோவை பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தராக இருப்பவர் கணபதி (வயது 65).
இவர் மீது பேராசிரியர்கள் பணிநியமனம் செய்ததில் முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது. மேலும் இவர் பணிநியமனத்துக்கு லட்சக்கணக்கில் பணத்தை பெற்றதாகவும் கூறப்பட்டது. சுழற்சி அடிப்படையில் பேராசிரியர்களை பணிநியமனம் செய்யாமல் லஞ்சம் வாங்கி கொண்டு பதவி இடம் நிரப்புவதாக புகார் கூறப்பட்டது.
இதுதொடர்பாக அப்போதைய தமிழக கவர்னரிடம் புகார் அளிக்கப்பட்டு இருந்தது. ஆனாலும் இதுகுறித்து துறைரீதியான விசாரணை மட்டுமே நடத்தப்பட்டது. ஆனால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படாமலேயே இருந்தது.
இந்நிலையில் வடவள்ளி அருகே உள்ள நவாவூர் பகுதியை சேர்ந்த பல்கலைக்கழக ஊழியரின் மனைவி லட்சுமிபிரபா என்ற பெண் வடவள்ளி போலீசில் ஒரு புகார் செய்திருந்தார். புகாரில், சுழற்சி அடிப்படையில் பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியர் பணியிடத்துக்கு என்னை நியமிக்காமல் விதிமுறைகளை மீறி துணைவேந்தர் பணத்தை வாங்கி கொண்டு வேறு ஒருவருக்கு உதவி பேராசிரியர் பணியிடத்தை வழங்கியதாகவும், இதுகுறித்து கேட்ட என்னை ஜாதி பெயரை சொல்லி திட்டியதாகவும் துணைவேந்தர் கணபதி மீது வடவள்ளி போலீசில் புகார் செய்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் துணைவேந்தர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் சென்னை ஐகோர்ட்டில் துணைவேந்தர் கணபதி ஜாமீன் பெற்றார். இதையடுத்து அவர் பல்கலைக்கழக நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார். தொடர்ந்து இவர் மீது பல்வேறு முறைகேடு புகார்கள் கூறப்பட்டு வந்தது.
இந்த நிலையில் கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியர் பதவி இடத்திற்கு சுரேஷ் என்பவர் துணைவேந்தர் கணபதியை சந்தித்தார். அப்போது துணைவேந்தர் ரூ.30 லட்சம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து சுரேஷ் கோவை லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயன பொடி தடவிய ரூ.1 லட்சம் பணம் மற்றும் ரூ.29 லஞ்சம் காசோலையை சுரேஷிடம் கொடுத்து அனுப்பினர். சுரேஷ் இன்று காலை பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள துணைவேந்தரின் இல்லத்திற்கு சென்றார். அங்கு துணைவேந்தர் கணபதியை சந்தித்து ரூ.1 லட்சம் ரொக்கமும், ரூ.29 லட்சத்துக்கு காசோலையும் கொடுத்ததாக தெரிகிறது.
அப்போது அங்கு மறைந்திருந்த கோவை லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி.க்கள் தட்சிணாமூர்த்தி, ராஜேஷ் ஆகியோர் தலைமையிலான போலீசார் லஞ்சம் வாங்கிய துணைவேந்தர் கணபதியை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். மேலும் அவரது வீடு, பல்கலைக்கழகத்தில் உள்ள அவரது அறைகளிலும் சோதனை நடத்தி வருகிறார்கள். சோதனையை தொடர்ந்து அவரது வீட்டின் நுழைவுவாயில் மூடப்பட்டுள்ளது. அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.