

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் முந்தைய ஆட்சியில் நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் கோடிக்கணக்கில் ஊழல் நடைபெற்றதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதில் மேற்கு வங்காளத்தில் உள்ள நிலக்கரி சுரங்கத்தின் இரு பிரிவுகளை ஒதுக்கியதில் முறைகேடு நடந்ததாக மத்திய நிலக்கரித்துறை முன்னாள் செயலாளர் குப்தா மற்றும் 5 பேர் மற்றும் நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு பெற்ற விகாஸ் மெட்டல்ஸ் அண்ட் பவர் லிமிடெட் நிறுவனம் (விஎம்பிஎல்) மீது டெல்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
நீதிபதி பரத் பராஷர் முன் நடந்த இந்த விசாரணையின் முடிவில் அனைவரும் குற்றவாளிகள் என தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதன்பின்னர் குற்றவாளிகளுக்கான தண்டனை தொடர்பான வாதம் நடைபெற்றது. அப்போது, குற்றவாளிகளுக்கு அதிகபட்சம் 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்க வேண்டும் எனவும், சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு அதிக அளவில் அபராதம் விதிக்க வேண்டும் என்றும் சி.பி.ஐ. தரப்பு கோர்ட்டில் வாதிட்டது.
அதன்படி குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்பட்டது. முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள நிலக்கரித்துறை முன்னாள் செயலாளர் குப்தா, மற்ற இரண்டு அதிகாரிகளான கே.எஸ்.கிரோபா, கே.சி.சம்ரியா ஆகியோருக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.