

கிருஷ்ணகிரியில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா சென்னை சாலையில் உள்ள அரசு ஆண்கள் கலைக்கல்லூரி வளாகத்தில் நேற்று நடந்தது. இந்த விழாவிற்கு தமிழக சட்டசபை சபாநாயகர் தனபால் தலைமை தாங்கினார். துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில், தமிழக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு, எம்.ஜி.ஆரின் உருவப்படத்தை திறந்து வைத்து ரூ.66 கோடியே 13 லட்சம் மதிப்பிலான 242 முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தார். மேலும் ரூ.327 கோடியே 14 லட்சம் மதிப்பில் 25 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
மேலும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கிய அவர், 33 ஆயிரத்து 131 பயனாளிகளுக்கு ரூ.65 கோடியே 75 லட்சம் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
அ.தி.மு.க. ஆட்சி மக்களுக்கான ஆட்சி. இந்த ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை மக்கள் அறிவார்கள். ஆனால் எதிர்க்கட்சிகளோ, ஏதேனும் ஒரு பிரச்சினையை தூண்டி, அதன் மூலம் குந்தகம் விளைவித்து ஆதாயம் தேட முயற்சி செய்கிறார்கள்.
ஆற்றில் செல்லும் தெளிந்த நீரோடை போல இந்த ஆட்சி செல்கிறது. இதில் குழப்பத்தை ஏற்படுத்தி யாராலும் ஆதாயம் தேட முடியாது. அ.தி.மு.க. என்பது ஒரு எக்கு கோட்டையாகும். இந்த எக்கு கோட்டையில் மோதுபவர்களின் தலை தான் உடையும். கோட்டைக்கு ஒன்றும் ஆகாது.
அ.தி.மு.க.வில் தான் அடிமட்ட தொண்டன் கூட உயர்ந்த நிலைக்கு வர முடியும். விசுவாசமாக இருந்தால் யாருக்கும் இங்கு பதவிகள் உண்டு. ஒன்றரை கோடி தொண்டர்களை கொண்ட இயக்கம் இது. இந்த இயக்கத்துடன் மோதி பார்க்க நினைத்தால் யாராக இருந்தாலும் அவர்கள் தான் தோற்று போவார்கள். வஞ்சகர்களின் எண்ணம் ஒருபோதும் நடக்காது. அ.தி.மு.க. ஆட்சியிலும், கட்சியிலும் குழப்பத்தை ஏற்படுத்த நினைப்பவர்களின் எண்ணம் ஒருபோதும் பலிக்காது.
ஒரு காட்டில் ஓநாய் ஒன்று இருந்தது. அந்த ஓநாய் நரி ஒன்றை அழைத்து எனக்கு உண்ண உணவு வேண்டும். எனவே ஏதாவது ஒரு உணவை கொண்டு வா என்று கூறியது. ஓநாய் கூறிய கட்டளைப்படி நரியும், உணவை தேடி சென்றது. அப்போது கிராமத்தின் எல்லையில் எருது ஒன்று இருந்தது. அந்த எருதுவிடம் போய் நரி பேசியது.
அப்போது எருது தன்னுடன் மற்றொரு எருதும் வந்ததாகவும், தற்போது தான் தனியாக இருப்பதாகவும் கூறியது. இதைத்தொடர்ந்து அந்த எருதுவை ஓநாயிடம் உணவுக்காக கொண்டு விட நரி முடிவு செய்தது. இதற்காக நரி அந்த எருதுவை காட்டிற்கு அழைத்தது. அப்போது எருது காட்டில் சிங்கம், புலி போன்ற விலங்குகள் இருக்குமே நான் எப்படி வர முடியும்? என்று கூறியது.
அந்த நேரம் எருதுவிடம் பேசிய நரி, காட்டில் ஏராளமான இலை, தளைகள், புற்கள் உள்ளது. நீ நன்றாக சாப்பிடலாம் என்று ஆசை வார்த்தை கூறியது. அதை நம்பி எருதுவும் நரியுடன் சென்றது. அந்த நேரம் காட்டில் காத்திருந்த ஓநாய் எருதுவை கடித்து குதறியது. பின்னர் ஓநாய் தான் குளித்து விட்டு வருவதாகவும், அதுவரை எருதுவின் உடலை பத்திரமாக பார்த்திருக்குமாறு கூறியது.
அந்த நேரம் எருதுவின் மூளையை சாப்பிட எண்ணிய நரி எருதுவின் மூளையை சாப்பிட்டு விட்டது. குளித்து விட்டு வந்த ஓநாய் இறந்து கிடந்த எருதுவின் தலையில் மூளை இல்லாததை கண்டு, எங்கே எருதுவிற்கு மூளை இல்லை? என்று கேட்டது அந்த நேரம் நரி அந்த எருதுவிற்கு நான் அழைத்து வரும் போதே மூளை இல்லை. அதற்கு மூளை இருந்தால் அது என்னுடன் தான் வந்திருக்காதே என்று கூறியது.
இந்த கதை உணர்த்தக்கூடிய பாடம் என்ன வென்றால் ஆசை வார்த்தைகளை நம்பி ஏமாறாதீர்கள். உங்களுக்கு தகுந்த இடம் இது தான். இந்த இடத்தை விட்டு சென்றால் அதற்கான பலனை அனுபவிக்க வேண்டியது வரும் என்பதை உணர்த்துகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.