

சேலத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா வருகிற 30-ந்தேதி நடக்கிறது. இதையெட்டி இந்த விழாவை சிறப்பாக நடத்துவது தொடர்பாக சேலம் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் இன்று ஆலோசனை கூட்டம் நடந்தது. இக்கூட்டத்திற்கு மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் வெங்கடாஜலம் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.
இதில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று பேசியதாவது:-
சேலம் மாவட்டத்தில் முதல்-அமைச்சர் என்கிற பெருமை இம்மாவட்ட தொண்டர்களுக்கு கிடைத்துள்ளது. நீங்கள் எப்போது வேண்டுமானாலும் என்னை சந்திக்கலாம். நமது மாவட்டத்திற்கு தேவையான அடிப்படை வசதிகள் எல்லாம் செய்யப்பட்டு வருகிறது.
சேலத்தில் கடந்த 6 ஆண்டுகளாக கடுமையான வளர்ச்சி ஏற்பட்டு இருக்கிறது. போக்குவரத்து நெரிசலை தீர்க்க பல இடங்களில் பாலங்கள் கட்டப்பட்டு வருகிறது. சேலம் குரங்குசாவடியில் ஸ்டீல் பிளாண்ட் பிரிவு ரோடு பகுதியில் மேம்பாலம் அமைக்க விரைவில் டெண்டர் விடப்படும்.
கடும் வறட்சி நிலவிய போதும் சேலம் மாநகராட்சியில் குடிநீர் தட்டுப்பாடு இல்லாமல் நடவடிக்கை எடுக்கப்பட்டது. சேலம் அரசு ஆஸ்பத்திரியில் மகப்பேறு பிரிவில் 500 படுக்கை அறைகள் கொண்ட ஆஸ்பத்திரியாக தரம் உயர்த்தப்பட்டது. சேலம் மாநகரத்தை சுற்றி அனைத்து சாலைகளையும் இணைக்கும் வகையில் சுற்று சாலை அமைக்க மத்திய அரசுக்கு திட்டம் அனுப்பப்பட்டுள்ளது.
இந்தியாவிலேயே தமிழகத்தில் சிறந்த கல்வி அளிக்கப்படுகிறது. உயர் கல்வி படிப்பவர்களின் எண்ணிக்கை 100-க்கு 21 பேராக இருந்தது. தற்போது 44.31 சதவீதமாக அதிகரித்துள்ளது. தமிழகம் வளர்ச்சி பாதையை நோக்கி செல்கிறது.
இந்தியாவிலேயே இரண்டாக பிரிந்து இணைந்த கட்சி என்றால் அது அ.தி.மு.க.தான். இரண்டாக பிரிந்து இருந்ததை பயன்படுத்தி தி.மு.க. ஆட்சியை பிடிக்க நினைத்ததை தொண்டர்கள் தவிடு பொடியாக்கி உள்ளனர்.
விரைவில் இரட்டை இலை மீட்போம். மக்கள் ஆதரவு இருக்கும் வரை கட்சியையும் ஆட்சியையும் அசைக்க முடியாது. ஒரு தொண்டனை கூட விலைக்கு வாங்க முடியாது, யாராலும் தொட்டுக் கூட பார்க்க முடியாது. ஆட்சியை கலைத்து விடலாம் என்று ஒரு சிலர் நினைக்கிறார்கள்.
அ.தி.மு.க.வில் தான் சிறு தொண்டன் கூட உயர் பதவியை அடைய முடியும். தி.மு.க. வாரிசு அடிப்படையில் உருவாகும் இயக்கம். உண்மையாக உழைப்பவர்கள் அ.தி.மு.க.வில் பதவியில் இருக்க முடியும். எத்தனை தடைகள் வந்தாலும் தகர்க்கப்படும்.
எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் கடைசி வரை மக்களுக்காக உழைத்தார்கள். அம்மாவின் ஆத்மா கட்சியையும் ஆட்சியையும் காத்து வருகிறது. விரைவில் உள்ளாட்சி தேர்தல் வருகிறது. அனைவரும் சேர்ந்து உழைப்போம். சேலத்தில் 60 வார்டுகளில் அ.தி.மு.க. வெற்றி பெற ஒன்றிணைந்து உழைக்க வேண்டும்.
அம்மாவின் கோட்டை என்பது சேலம் என்பது தான் நிரூபிக்க வேண்டும். இரண்டு லட்சத்தற்கு மேற்பட்டவர்கள் பங்கேற்பார்கள் என்பதால் எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழா கருப்பூர் என்ஜினீயரிங் கல்லூரியில் நடைபெறுகிறது. அனைவரும் குடும்பத்துடன் பங்கேற்ற வேண்டும்.
சேலத்தில் நடக்கும் நூற்றாண்டு விழாவை போல இந்தியாவில் எங்கும் நடைபெறவில்லை என்று கூறும் அளவுக்கு இந்த விழாவை நடத்த வேண்டும். நான் சாதாரண தொண்டன். நீங்கள் எப்போதும் என்னை தொடர்பு கொள்ளலாம்.
அம்மா விட்டு சென்ற பணியை நான் தொடர்கிறேன். துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கட்சி ஒருங்கிணைப்பாளராக உள்ளார். நான் இணை ஒருங்கிணைப்பாளராக உள்ளேன். இயக்கத்திற்கு முதுகெலும்பாக தொண்டர்கள் உள்ளனர்.
எதிரிகளை வீழ்த்துவோம். இரட்டை இலையை மீட்டு எடுப்போம்