இந்த ஆண்டு முதல் சேலத்தில் அரசு சட்டக்கல்லூரி செயல்படும்- முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு

சேலம் மாவட்டத்தில் இந்த ஆண்டு முதல் அரசு சட்டக்கல்லூரி செயல்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடன் உதவி வழங்கிய காட்சி.
விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடன் உதவி வழங்கிய காட்சி.
Published on

தமிழ்நாடு கிராம ஒன்றியம் சார்பில் மாநில அளவில் வங்கி கடன் வழங்கும் விழா சேலம் பெரியார் பல்கலைகழகம் எதிரே உள்ள மண்டபத்தில் இன்று நடந்தது.

இந்த விழாவிற்கு சென்னை இந்தியன் வங்கி நிர்வாக இயக்குனரும் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியுமான பத்மஜாசுந்துரு தலைமை தாங்கி பேசினார்.

இந்த விழாவில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு 31 ஆயிரத்து 406 பயனாளிகளுக்கு ரூ.112 கோடி மதிப்பிலான விவசாய பயிர்கடன், பண்ணை நில மேம்பாடு, விவசாய பண்ணை கருவிகள் வாங்க, நீர் பாசன வசதி பெருக்க, நீர் மேலாண்மை செய்ய, கால்நடை பராமரிப்பு, சுய உதவிகுழு, நடைபாதை வியாபாரி கடன், தொழில் கடன், வீட்டுக்கடன், வாகன கடன், மீனவர்களுக்கு கடன் என பல்வேறு வகையான வங்கி கடன் உதவிகளை வழங்கினார்.

பெரு நிறுவ சமூக பொறுப்பு திட்டத்தின் கீழ் 10 அரசு பள்ளிகளுக்கு ரூ.40 ஆயிரம் வீதம் ரூ.4 லட்சத்தை வழங்கி பேசும்போது, கிராமப்புற மக்களின் மேம்பாட்டுக்கான வங்கியின் செயல்பாடுகளையும் பாராட்டினார்.

விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

தமிழ்நாடு கிராம வங்கிக்கு 50 சதவீதத்தை மத்திய அரசும், 35 சதவீதத்தை ஏதேனும் ஒரு தேசிய வங்கியும், மீதமுள்ள 15 சதவீதத்தை மாநிலம் அரசும் அளிக்கின்றது. 35 சதவீதம் மூலதனம் வழங்கிய தேசிய வங்கி, கிராமிய வங்கிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யும்.

குறிப்பாக, வங்கி செயல்பட வேண்டிய முறை, அதற்கான தொழில் நுட்ப உதவிகள், ஆலோசனைகள் வழங்குவதுடன் கிராம வங்கியின் தலைவராகவும், தேசிய வங்கியின் உயர் அதிகாரியே செயல்படுவார்.

வங்கிகள் இணைவது என்பது உலகமயமாக்குதலுக்கு பின் சாதாரண நிகழ்வுகள் என்றாகிவிட்டது. கிராம வங்கிகளும் அதுபோன்று மத்திய அரசால் இணைக்கப்பட்டு வருகின்றது. 196 ஊரக வங்கிகளில் இருந்த நிலைமாறி தற்போது 45 வங்கிகள் உள்ளன.

ஆனால், சிறு, குறு வங்கிகள் சேர்ந்து பெரிய வங்கிகளாக உருவானதால் மற்ற தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளுக்கும் மற்றும் தனியார் வங்கிகளுக்கும் இணையாக செயல்பட்டு வருகின்றன.

மத்திய அரசும் மாநில அளவிலான ஒரு ஊரக வங்கி என்ற நிலைபாட்டினை செயல்படுத்த முயற்சிகள் எடுத்து வருகின்றது. அதன் ஒரு பகுதியாகத்தான் தமிழகத்தில் இருந்த பாண்டியன் கிராம வங்கியும், பல்லவன் கிராம வங்கியும், இணைந்து தமிழ்நாடு கிராம வங்கியாக உருவெடுத்துள்ளது.

பாண்டியன் கிராம வங்கி 9-3-1976 -ல் தென் தமிழகத்தில் பிரிக்கப்படாத ராமநாதபுரம் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் தொடங்கப்பட்டது.

தருமபுரி மாவட்டம் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் செயல்பட்டு வந்த அதியமான் கிராம வங்கியும், விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வந்த வள்ளலார் கிராம வங்கியும் 31.8.2006-ம் ஆண்டு ஒன்றிணைந்து பல்லவன் கிராம வங்கியாக உதயமானது. இந்த வங்கி தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும், சென்னை மாவட்டத்தை தவிர செயல்படுகிறது.

சென்னை நகர பகுதிகளிலும் தமிழ்நாடு கிராம வங்கிகளின் கிளைகள் செயல்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் தற்சமயம் 630 கிளைகள் உள்ளன. இது வெகுவிரைவில் ஆயிரத்தை அடைய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வங்கியை சேர்ந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளது உண்மையிலேயே மகிழ்ச்சி அளிக்கின்றது.

தமிழ்நாடு கிராம வங்கியின் தற்போதைய மொத்த வர்த்தகம் ரூபாய் 23 ஆயிரம் கோடிக்கு மேல் உள்ளது. பல வங்கிகள் நஷ்டத்தில் செயல்பட்டு வந்தாலும், பல்லவன் கிராம வங்கியும், பாண்டியன் கிராம வங்கியும் தொடர்ந்து லாபத்தில் இயங்கி வருவதை பார்த்து மகிழ்ச்சி அடைகின்றேன்.

மற்ற வங்கிகளை காட்டியிலும் வாராக்கடன் மிக குறைவு என்பதையும் அறிகிறேன். மற்ற வங்கிகளில் வாரா கடன் 10 விழுகாட்டிற்கு மேல் உள்ள நிலையில் தமிழ்நாடு கிராம வங்கியின் வாரா கடன் 1.79 விழுக்காடு என்பது பெருமைக்குரிய வி‌ஷயமாகும்.

இங்கே வந்திருக்கின்ற பெரும்பாலும் ஏழை, எளியோர் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்பதற்காக இன்றைக்கு பல்வேறு உதவிகளை வங்கிகளின் மூலமாக நாடக்கூடிய அப்படிப்பட்ட நல்ல உள்ளங்களுக்கு இந்த வங்கி பேரூதவியாக செயல்படுகிறது என்று சொன்னால் மிகையாகாது.

வங்கியில் குறைந்த அளவிலான வாராக் கடன் சாமானிய மக்களின் நேர்மைக்கு ஓர் எடுத்துக்காட்டு. இங்கு சுய உதவிக்குழு உறுப்பினர்கள் ஆயிரக்கணக்கில் குழுமி உள்ளீர்கள். சுய உதவிக்குழுக்களுக்கு கடன் வழங்குவதில் 99 விழுக்காடு வசூலாகிறது என்பதை அறிந்து பெருமைபடுகின்றேன்.

கடன் வாங்கினால் பெரும்பாலும் திருப்பிக் கட்டமாட்டார்கள். ஆனால், இங்கு வருகை புரிந்த சுய உதவிக்குழுவை சேர்ந்தவர்கள் வாங்கிய கடனை 99 சதவீதம் திருப்பி அளித்து வரலாற்று படைத்திருக்கின்றனர். இந்த வங்கி உங்கள் வங்கியாக கருதுகின்றேன். இந்த வங்கி செழித்தால் தான் தாங்கள் நலம் பெற வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையிலேயே வாங்கிய கடனை முறையாக செலுத்தி மேலும் அந்த தொழில் வளர்வதற்கு ஊக்கமும், ஆக்கமும் அளிக்கின்றவர்களுக்கு இந்த வங்கிக்கு உறுதுணையாக இருப்பது பாராட்டுக்குரியது.

சில சுய உதவிக்குழுக்கள் 20 லட்சம் ரூபாய் வரை பிணையம் இல்லாம் கடன் பெற்றுள்ளார்கள் என்பதை அறிகின்றேன். எந்த ஒரு செக்யூரிட்டியும் இல்லாம் ரூ.20 லட்சம் வரைக்கும் சுய உதவிக்குழுக்களுக்கு இந்த வங்கி அளிக்கின்றது. முதல்- அமைச்சராக இருந்தால் கூட வங்கியில் செக்யூரிட்டி வாங்கி விட்டு தான் கடன் கொடுப்பார்கள். நான் கூட வீடு கட்டுவதற்கு வங்கியை அணுகியபோது, அதற்கு தேவையான செக்யூரிட்டி கொடுத்தால் தான், கடன் கொடுப்பதாக தெரிவித்தார்கள்.

இங்கு வந்துள்ள சுய உதவிக்குழுக்களுக்கு எந்தவித செக்யூரிட்டியும் இல்லாமல் 20 லட்சம் ரூபாய் வரை கடன் உதவி கொடுக்கிறார்கள் என்று சொன்னால் அந்த வங்கி உண்மையிலேயே பாராட்டுக்குரியது தான்.

இந்த வங்கியானது மலைவாழ் மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதற்காக அம்பாசமுத்திரம் அருகே உள்ள காணிகுடியிருப்பு என்ற மலை வாழ் மக்கள் குடியிருப்புக்கு சோலார் விளக்கு முதல், கடன் கொடுத்து வாழ்வில் ஒளியேற்றி உள்ளதை அறிந்து மகிழ்ச்சி அடைகின்றேன்.

ஏனென்றால் மலைவாழ் மக்களுக்கு மின்சார வசதி என்பது கடினமானது. உயரமான மலை பகுதி இருக்கின்ற காரணத்தினாலே அங்கே மின்கம்பங்கள் அமைக்கப்பட்டு, மின்கம்பிகள் பொருத்தப்பட்டு, அவர்களுக்கு மின் இணைப்பு கொடுக்க வேண்டும். மரம் அடர்ந்து இருப்பதால் வனத்துறை அனுமதி பெற வேண்டும். புயல், காற்று வீசுகின்றபோது, அந்த மரங்கள் எல்லாம் கம்பத்தின் மீது, மின்கம்பிகளின் மீது விழுந்து அடிக்கடி மின் தடை ஏற்படும். அந்த தடையையும் மாற்றி மலைவாழ் மக்கள் பயன்பெறுகின்ற விதமாக சூரிய ஒளி மின்சக்தியை வங்கி அளித்திருப்பது பெருமைக்குரியது.

மீனவர்களின் வளர்ச்சிக்காக மத்திய மற்றும் மாநில அரசு உதவியுடன் கடன் வழங்கியுள்ளது. உழவுக்கும், தொழிலுக்கும் வந்தனை செய்வோம் என்ற பாரதியின் கூற்றுக்கு இணங்க தமிழ்நாடு கிராம வங்கி விவசாய வளர்ச்சிக்காகவும், கிராமத்தின் வளர்ச்சிக்காகவும் கடன் உதவி வழங்கி வருகிறது.

சேலம் மாவட்டத்தில் இந்த ஆண்டு முதல் அரசு சட்டக் கல்லூரி செயல்படும் என்ற மகிழ்ச்சியான செய்தியை தெரிவித்துக் கொள்கிறேன்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com