அமராவதி அணை 20-ந்தேதி திறக்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு

திருப்பூர் அமராவதி அணையிலிருந்து பழைய வாய்க்கால் பாசன பகுதிகளின் குறுவை சாகுபடிக்காக வரும் 20-ம் தேதி முதல் 2020ம் ஆண்டு ஜனவரி 18-ம் தேதி வரை தண்ணீர் திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
Published on

சென்னை:

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

திருப்பூர் மாவட்டம், அமராவதி அணையிலிருந்து அமராவதி பழைய மற்றும் புதிய பாசன பகுதிகளுக்கு தண்ணீர் திறந்து விடுமாறு திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களைச் சார்ந்த நீரினைப் பயன்படுத்துவோர் சங்க பிரதிநிதிகள் உள்ளிட்ட வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து எனக்கு கோரிக்கைகள் வந்துள்ளன.

திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களைச் சார்ந்த நீரினைப் பயன்படுத்துவோர் சங்க பிரதிநிதிகள் உள்ளிட்ட வேளாண் பெருங்குடி மக்களின் வேண்டுகோளினை ஏற்று, திருப்பூர் மாவட்டத்தைச் சார்ந்த 8 பழைய வாய்க்கால் பாசனப் பகுதிகளுக்கு குறுவை சாகுபடிக்காக 20.9.2019 முதல் 18.1.2020 வரை 1944 மி.கன.அடிக்கு மிகாமலும், திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் 10 பழைய ராஜ வாய்க்கால் பாசனப் பகுதிகளுக்கு, 20.9.2019 முதல் 4.12.2019 வரை 3110 மி.க.அடிக்கு மிகாமலும் மற்றும் திருப்பூர் மாவட்டத்திலுள்ள அமராவதி பிரதானக் கால்வாய் மூலம் பாசனம் பெறும் புதிய பாசனப் பகுதிகளுக்கு 20.9.2019 முதல் 4.12.2019 வரை 1711 மி.க அடிக்கு மிகாமலும் ஆக மொத்தம் 6765 மி.கனஅடிக்கு மிகாமல் அமராவதி அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட நான் ஆணையிட்டுள்ளேன்.

இதனால் திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 54,637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

மேலும், விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com