முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 21-ந்தேதி கரூர் வருகை

கொரோனா ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 21-ந்தேதி கரூர் வருகை தந்து, புதிய திட்டப்பணிகளுக்கும் அடிக்கல் நாட்டுகிறார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
Published on

கரூர்:

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, வருகிற 21-ந்தேதி (வெள்ளிக்கிழமை) கரூர் மாவட்டத்திற்கு வளர்ச்சி திட்ட பணிகள் மற்றும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக வருகை தர உள்ளார். இதையொட்டி மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கலெக்டர் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டர் பேசுகையில், தமிழக முதல்-அமைச்சர் வருகிற 21-ந்தேதி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் பங்கேற்று, கரூர் மாவட்டத்தில் நடைபெறவுள்ள புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைக்க உள்ளார்.

பின்னர், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்க உள்ளார். மேலும், கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், கரூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்தும், கொரோனா தடுப்பு குறித்து மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடத்த உள்ளார்.

மேலும் குறுசிறு மற்றும் நடுத்தர தொழில் கூட்டமைப்பு நிர்வாகிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுவினருடன் கலந்தாய்வுக்கூட்டம் நடைபெற உள்ளது. நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் அனைத்து துறை அலுவலர்கள் உள்ளிட்ட அனைவரும் கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்த பிறகே அனுமதிக்கப்படுவார்கள்.

விழா மேடை மற்றும் ஆய்வுக்கூட்ட அரங்கம் முழுவதுமாக கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்திட வேண்டும். சமூக விலகலை கடைப்பிடித்து இருக்கைகள் அமைத்திட வேண்டும், என்றார். கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவன், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன் மற்றும் அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com