சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி முடிவு எடுப்போம்- எடப்பாடி பழனிசாமி பேட்டி

உச்சநீதிமன்ற தீர்ப்பை விமர்சனம் செய்ய இயலாது. அந்த தீர்ப்பை சட்ட வல்லுனர்களுடன் கலந்து ஆலோசித்து முடிவு செய்யப்படும் என்று முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார். #edappadipalanisamy #cauverywater
சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி முடிவு எடுப்போம்- எடப்பாடி பழனிசாமி பேட்டி
Published on

கோவை:

கோவை விமான நிலையத்தில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று நிருபர்களிடம் கூறியதாவது,

கேள்வி: உச்சநீதி மன்றத்தில் தமிழகத்திற்கு தண்ணீர் குறைக்கப்பட்டுள்ளதே?

பதில்: நேற்றைய தினம் ஊடகங்கள் வாயிலாகவும், பத்திரிகைகள் வாயிலாகவும் தெளிவாக எங்கள் நிலைப்பாட்டை தெரிவித்துள்ளோம். அம்மா அவர்கள் சட்ட போராட்டம் மூலமாக தமிழகத்திற்கு உரிய நீரை பெற உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தையடுத்து அந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வந்துள்ளது.

இந்த தீர்ப்பில் சில அம்சங்கள் வரவேற்கத்தக்கது. சில வி‌ஷயங்கள் ஏமாற்றம் அளிக்கிறது. தமிழகத்திற்கு ஏற்கனவே நடுவர் நீதிமன்றம் 192 டி.எம்.சி. வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்து இருந்தது. தற்போது வந்துள்ள தீர்ப்பில் 14.75 டி.எம்.சி. குறைக்கப்பட்டு 177.25 டி.எம்.சி. தமிழகத்திற்கு வழங்கப்படும் என்பது ஏமாற்றம் அளிக்கிறது.

அதேவேளையில் அம்மா அவர்கள் காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு அமைக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் நேற்று வந்த தீர்ப்பில் காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் நீர் முறைப்படுத்தும் குழு 6 வாரத்துக்குள் மத்திய அரசு அமைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு இருப்பது வரவேற்கத்தக்கது.

அதேபோல் நதிகள் எந்த மாநிலத்திற்கும் சொந்தம் அல்ல. அது தேசிய சொத்து என தீர்ப்பு வழங்கப்பட்டு இருப்பது வரவேற்கத்தக்கது. நமது பாசன பரப்பு 24 ஆயிரத்து 708 லட்சம் உள்ளது உறுதிப் படுத்தப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது.

அம்மா அவர்கள் தான் நடுவர் நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பை அரசு இதழில் வெளியிட வேண்டும் என சட்டபோராட்டம் வழியாக கெஜட்டில் வெளியிட செய்தார்கள்.

இப்பொழுதும் அம்மா அவர்கள் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில் தான் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இருந்தாலும் ஏற்கனவே நடுவர் மன்றம் வழங்கிய தீர்ப்பில் இருந்து நீரின் அளவு குறைத்து வழங்கப்பட்டு இருப்பது ஏமாற்றத்தை அளிக்கிறது.

கேள்வி: மின் ஊழியர்கள் பிரச்சினை எந்த அளவுக்கு உள்ளது? அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?

பதில்: மின்வாரிய அமைச்சர் விரைவில் மின்வாரிய சங்கங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண்வார்.

கேள்வி: காவிரி தீர்ப்பு தொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என எதிர் கட்சிகள் கூறியுள்ளார்களே?

பதில்: உச்சநீதிமன்ற தீர்ப்பில் தெளிவாக கூறியுள்ளார்கள். இந்த உத்தரவு 15 ஆண்டுகளுக்கு செல்லும். மேல்முறையீடு செய்ய இயலாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேள்வி: தமிழக அரசு மறு பரிசீலனை மனு தாக்கல் செய்ய வேண்டும் என ரஜினிகாந்த் கூறியிருக்கிறாரே?

பதில்: இன்று பல்வேறு கட்சி தலைவர்களும் குறிப்பிட்டுள்ளார்கள். தீர்ப்பை முழுமையாக சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை செய்து அதன் அடிப்படையில் தீர்மானிக்கப்படும்.

கேள்வி: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தமிழக அரசு சார்பில் பிரதமரை சந்தித்து வலியுறுத்துவீர்களா?

பதில்: பல ஆண்டுகளாக நாம் எதிர்பார்த்து இருந்த காவிரி மேலாண்மை வாரியம், நீர் முறைப்படுத்தும் குழு அமைக்க வேண்டும் என்பது நமது கோரிக்கை. அதை உச்சநீதிமன்ற தீர்ப்பில் 6 வாரத்துக்குள் நிறைவேற்ற வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே மத்திய அரசு நிறைவேற்றும் என எதிர்பார்க்கிறோம்.

கேள்வி: இந்த தீர்ப்பால் டெல்டா விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள். அவர்களுக்கு என்ன நம்பிக்கை கொடுக்கிறீர்கள்?

பதில்: உச்சநீதிமன்ற தீர்ப்பை விமர்சனம் செய்ய இயலாது. அந்த தீர்ப்பை சட்ட வல்லுனர்களுடன் கலந்து ஆலோசித்து முடிவு செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதை தொடர்ந்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி குன்னூர் முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சியில் கலந்து கொள்ள புறப்பட்டு சென்றார்.

முன்னதாக, கோவை வந்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். அமைச்சர் சேவூர்ராமச் சந்திரன், முன்னாள் அமைச்சர் செ.ம. வேலுசாமி, ஏ.கே. செல்வராஜ் எம்.பி., எம்.எல். ஏ.க்கள் பி.ஆர்.ஜி. அருண்குமார், அம்மன் அர்ச்சுனன், எட்டிமடை சண்முகம், ஆறுக்குட்டி, கஸ்தூரி வாசு, ஓ.கே. சின்னராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மாவட்ட கலெக்டர் ஹரி ஹரன், மாநகராட்சி கமி‌ஷனர் விஜயகார்த்திகேயன், மாநகர போலீஸ் கமி‌ஷனர் பெரியய்யா, மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. பாரி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மூர்த்தி மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர். #tamilnews #edappadipalanisamy #cauverywater

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com