ஓய்வுபெற்ற பஸ் ஊழியர்களுக்கு பொங்கலுக்கு முன் ரூ.750 கோடி நிலுவைத் தொகை வழங்கப்படும்: முதல்வர் அறிவிப்பு

ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ரூ.750 கோடி நிலுவைத் தொகை பொங்கலுக்கு முன் வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் அறிவித்தார். #TNAssembly #BusStrike #TNCM #EdappadiPalanisamy
ஓய்வுபெற்ற பஸ் ஊழியர்களுக்கு பொங்கலுக்கு முன் ரூ.750 கோடி நிலுவைத் தொகை வழங்கப்படும்: முதல்வர் அறிவிப்பு
Published on

ஓய்வூதிய நிலுவைத் தொகை, சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் அரசுப் போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கு 7 நாட்களாக வேலைநிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அரசுக்கும் பல கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

முதல்வர் தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்தி, போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என சட்டசபையில் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.

இந்நிலையில், சட்டசபையில் இன்று 110-வது விதியின் கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதில், ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ரூ.750 கோடி நிலுவைத் தொகை பொங்கலுக்கு முன் வழங்கப்படும் என்று அறிவித்தார்.

சட்டப்பேரவை விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் வெளியிட்ட அறிக்கை வருமாறு:-

போக்குவரத்துக் கழகங்களின் நிதிப் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு, போக்குவரத்துக் கழகங்களுக்கு அரசு முன்னுரிமை கொடுத்து, 2011ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரை, அதிகப்படியான நிதி வழங்கி வந்துள்ளது.

கடந்த காலங்களில், அதிகரித்து வந்த செலவினத்தை ஈடு செய்வதற்கு ஏற்ப, நிரந்தர நிதி ஆதாரத்தை ஏற்படுத்தாததால், போக்குவரத்துக் கழகங்கள் பெரும் நஷ்டத்தில் இயங்கின. இச்சூழ்நிலையில், போக்குவரத்துக் கழகங்களின் நிதி நிலைமையை சரி செய்யும் பொருட்டு, நிதி ஆதாரத்தை ஏற்படுத்துவதற்கான உத்திகளை கடைபிடித்ததோடு, அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு 2011 முதல் இந்நாள் வரை, டீசல் விலை ஏற்றத்திற்கான தொகை 2,848.36 கோடி ரூபாயை அரசு மானியமாக வழங்கியுள்ளது. மேலும், அரசு பொது மக்களின் நலன் கருதி, போக்குவரத்துக் கட்டணத்தை குறைந்த அளவிலேயே பராமரித்து வருகிறது.


கடந்த 2011ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரை, அரசு போக்குவரத்துக் கழகங்களின் நிதிப் பற்றாக்குறையை ஈடு செய்திட, 5,138.57 கோடி ரூபாய் அளவிற்கு நிதி வழங்கியுள்ளது. 2017-18ஆம் ஆண்டில் மட்டும், ஓய்வு பெற்ற போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களுக்கு நிலுவைத் தொகை வழங்க 1,397.39 கோடி ரூபாயும், தற்போது பணிபுரியும் தொழிலாளர்களுக்கு அகவிலைப்படி உள்ளிட்ட நிலுவைத் தொகைக்காக, 291.99 கோடி ரூபாயும் தமிழ்நாடு அரசு வழங்கியுள்ளது.

போக்குவரத்துக் கழகங்களில் 30.11.2017 வரை பணியாற்றி ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத்
தொகைக்காக 750 கோடி ரூபாயினை அரசு வழங்கும் என்பதை இம்மாமன்றத்தில் அறிவிப்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன்.

மேலும், இந்த அறிவிப்பின் மூலம் வழங்கப்படும் 750 கோடி ரூபாய் தொகையானது, போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு பொங்கல் பண்டிகைக்கு முன்னதாக அளிக்கப்படும் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்
கொள்கிறேன். இப்போது, அரசால் வழங்கப்படும் இத்தொகையுடன் சேர்த்து, போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய ஓய்வு கால பலன்களுக்காக மட்டும், இதுவரை தமிழ்நாடு அரசு 2,147.39 கோடி
ரூபாய் வழங்கியுள்ளது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆகவே, போக்குவரத்துக் கழக தொழிலாளர்களின் கோரிக்கைகள் பலவற்றை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்கள், பொது மக்களின் நலன் கருதி, தங்கள் போராட்டத்தை உடனடியாக கைவிட்டு, பணிக்குத் திரும்புமாறு இந்த அவையின் வாயிலாக கேட்டுக்கொள்கிறேன்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com