

மும்பை :
மும்பையில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகையை கொண்டாட மக்கள் தயாராகி வருகின்றனர். இந்த நிலையில் மும்பையை சேர்ந்த நட்சத்திர ஓட்டல்கள், மதுபான பார்கள், மதுபான கடைகள் மற்றும் கேளிக்கை விடுதிகள், பண்டிகையை கொண்டாடுவதற்கு வசதியாக பல்வேறு கலை நிகழ்ச்சிகளை நடத்த தயார் நிலையில் உள்ளன.
இதைத்தொடர்ந்து அன்றைய தினங்களில் மதுபான பார்கள், கடைகள் இரவு முழுவதும் திறந்து வைக்க அனுமதிகேட்டு அரசிடம் விண்ணப்பித்து இருந்தனர்.
இதில் சில வரையறுக்கப்பட்ட சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு அனுமதி வழங்கப்பட்டது. இதுபற்றி மாநில கலால்துறை சூப்பிரண்டு சினேகலதா கூறுகையில், “நாளை(செவ்வாய்க்கிழமை) மற்றும் 25 மற்றும் 31-ந்தேதி ஆகிய நாட்களில் மட்டும் பார்வசதி கொண்ட ஓட்டல்கள் அதிகாலை 5 மணி வரையிலும், மதுபான கடைகள் இரவு 1 மணி வரையும் திறந்து வைக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
பொது இடங்களில் மதுபானங்கள் விற்றாலோ மற்றும் அனுமதி பெறாத ஓட்டல்களில் மதுபானங்கள் விற்பது கண்டு பிடிக்கப்பட்டால் ரூ.5 ஆயிரம் அபராதம் மற்றும் 6 மாத சிறை தண்டனை வழங்கப்படும்” என்றார்.