சீன அதிபர் ஸி ஜின்பிங்- பிரதமர் மோடி சந்திப்பு

சீன அதிபர் ஸி ஜின்பிங்கை இன்று சந்தித்த பிரதமர் மோடி எல்லை பிரச்சினை குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
சீன அதிபர் ஸி ஜின்பிங்- பிரதமர் மோடி சந்திப்பு
Published on

ஷியாமென்:

சீனாவின் புஜியாங் மாகாணம் ஷியாமென் நகரில் பிரிக்ஸ் நாடுகளின் 9-வது உச்சி மாநாடு நடந்து வருகிறது.

அதில் சீன அதிபர் ஸி ஜின்பிங், பிரதமர் நரேந்திர மோடி, ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், பிரேசில் அதிபர் மைக்கேல் டெமர், தென்னாப்பிரிக்க அதிபர் ஜேக்கப் ஜுமா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மாநாட்டின் 2-வது நாளான நேற்று பிரிக்ஸ் ஜியாமென் பிரகடனம் வெளியிடப்பட்டது. அதில் முதன் முறையாக பாகிஸ்தானின் லஸ்கர்-இ- தொய்பா உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகளுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

மாநாட்டில் பங்கேற்ற தலைவர்களுக்கு சீன அதிபர் ஸி ஜின்பிங் விருந்து அளித்தார். அதில் பிரதமர் மோடி உள்ளிட்ட பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில் இன்று சீன அதிபர் ஸி ஜின்பிங்கும், பிரதமர் நரேந்திர மோடியும் ஷியாமென் நகரில் சந்தித்தனர். அப்போது பிரிக்ஸ் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தியதற்கு சீன அதிபர் ஸி ஜின்பிங்குக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து கூறினார். சிக்கிம் எல்லையில் உள்ள டோக்லாமை சொந்தம் கொண்டாடிய சீன ராணுவம் அங்கு ரோடு போடும் பணியை மேற்கொண்டது.

அதற்கு எதிர்ப்பு தெரிவித்த இந்திய ராணுவம் அதை தடுத்து நிறுத்தியது. இதனால் இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து அங்கு இருநாடுகளும் ராணுவத்தை குவித்தன. இதனால் எல்லையில் 73 நாட்களாக பதட்டம் நிலவியது.

பேச்சுவார்த்தைக்குப் பிறகு இருநாடுகளுக்கும் இடையே சமரசம் ஏற்பட்டது. எனவே அங்கு ராணுவம் வாபஸ் பெறப்பட்டது. இப்பிரச்சினைக்கு பிறகு முதன் முறையாக இந்திய பிரதமரும், சீன அதிபரும் இன்று முறைப்படி சந்தித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

சந்திப்பை தொடர்ந்து இரு நாட்டு தலைவர்களிடையே பேச்சுவார்த்தை நடந்தது. அதில் எல்லைப் பிரச்சினை மற்றும் வர்த்தக மேம்பாடு குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. பேச்சு வார்த்தையில் பிரதமர் மோடியுடன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவல், வெளியுறவு செயலாளர் எஸ்.ஜெய்சங்கர் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

அதன்பின்னர் பிரதமர் நரேந்திர மோடி மியான்மர் புறப்பட்டு சென்றார். அங்கு மியான்மரில் வாழும் இந்தியர்களை சந்தித்து பேசுகிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com