

புதுடெல்லி:
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கடந்த 2001-ம் ஆண்டே ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்புக்கு உலகளாவிய தடை விதித்தது. ஆனால் அந்த அமைப்பின் தலைவரான மசூத் அசார் மீது தடை விதிக்கும் முடிவை நிறுத்தி வைத்திருப்பது புரியாத புதிராக உள்ளது. தவிர மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது என இந்தியா கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது.
பஞ்சாப் மாநிலம் பதான் கோட்டில் உள்ள ராணுவ தளத்தின்மீது கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 2-ம் தேதி ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியவுடன் அந்த அமைப்பின் தலைவரான மசூத் அசார் மீது தடை விதிக்கக் கோரி ஐக்கிய நாடுகள் சபைக்கு இந்தியா கடிதம் அனுப்பி இருந்தது. மேலும், இந்த தாக்குதல் தொடர்பான வலுவான ஆதாரங்களையும் இணைத்திருந்தது.
இந்தியா அளித்திருந்த அந்த ஆதாரங்களில் உள்ள தொழில்நுட்ப சாதகங்களை ஆராய்ந்த ஐ.நா. குழு இது பற்றி உறுப்பு நாடுகளின் கருத்துகளை கேட்டிருந்தது. தடை விதிப்பது குறித்து எந்த நாடும் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை. இதையடுத்து, அவர் மீது தடை விதிக்க ஐ.நா.சபை ஆயத்தமானது.
இந்த சூழலில் இந்த விவகாரத்தை நிறுத்தி வைக்கும்படி ஐ.நா. குழுவிடம் வீட்டோ அதிகாரம் கொண்ட சீனா கேட்டுக் கொண்டது. இதையடுத்து மசூத் அசார் மீதான தடையை ஐ.நா.சபை நிறுத்தி வைத்தது.
ஏற்கனவே மும்பை தாக்குதல் தொடர்பாக லக்விக்கு தடை விதிக்கும்படி இந்தியா கோரியபோதும் பாகிஸ்தான் சார்பில் சீனா முட்டுக்கட்டை போட்டிருந்தது. மசூத் அசார் விவகாரத்திலும் சீனா முட்டுக்கட்டை போட்டது இந்தியாவுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
மசூத் அசாரின்மீது தடை விதிக்க சீனா நேற்று நான்காவது முறையாக தனது வீட்டோ அதிகாரத்தின் மூலம் முட்டுக்கட்டை போட்டுள்ளது.
இந்நிலையில், மசூத் அசாருக்கு எதிராக ஐ.நா. சபையின் தடை விதிக்கும் முடிவுக்கு முட்டுக்கட்டை போடும் ஒரு நாட்டின் (சீனா) முடிவை தீவிரவாதத்துக்கு எதிரான எங்களது நடவடிக்கைகளை முடிவுகட்டும் முடிவாக பார்க்க கூடாது. தீவிரவாதத்தை ஒழிக்க போராடும் எங்களது சபதத்தை இந்த முடிவு எவ்வகையிலும் பாதிக்காது என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரவிஷ் குமார் இன்று தெரிவித்துள்ளார்.
புதுடெல்லியில், இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ரவிஷ் குமார், பிரபல மத போதகர் ஜாகிர் நாயக்கை மலேசியாவில் இருந்து இந்தியாவுக்கு அழைத்து வருவது தொடர்பாக மலேசிய அரசுக்கு விரைவில் கடிதம் எழுதப்படும் என்றும் குறிப்பிட்டார்.