

புதுடெல்லி:
28 மருந்துகளுக்கு இறக்குமதி வரியில் இருந்து சீனா விலக்கு அளித்து உள்ளது. இந்த மருந்துகளில் புற்றுநோய்க்கான அனைத்து மருந்துகளும் அடங்கும். மே 1-ந் தேதி முதல் இது அமலுக்கு வந்து உள்ளது.
இது தொடர்பாக இந்தியாவுக்கான சீன தூதர் லுவோ ஜாவோஹய் டுவிட்டரில் வெளியிட்டு உள்ள செய்தியில், “சீனா, 28 மருந்துகள் மீதான இறக்குமதிக்கு வரிவிலக்கு சலுகை அளித்து இருப்பது இந்திய மருந்து துறைக்கும், மருந்து ஏற்றுமதிக்கும் நற்செய்தியாக அமையும். இதன்மூலம் எதிர்காலத்தில் இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையேயான வர்த்தக சமனற்ற நிலை குறையும்” என கூறப்பட்டு உள்ளது.
மேலும், “வெளி உலகத்துக்கான சீனாவின் கதவு திறந்தே இருக்கிறது” என்றும் அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
சீனாவின் அதிரடி வரிவிலக்கு சலுகையால், மருந்துகளை அதிகளவில் ஏற்றுமதி செய்கிற இந்தியா நல்ல பலனை அடைய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. #China #ImportDuties #28Medicines #Tamilnews