வரி ஏய்ப்பவர்கள் யாராக இருப்பினும் சோதனை நடக்கும்: தொடர் ரெய்டுகள் குறித்து முதல்வர் கருத்து

வரி ஏய்ப்பவர்கள் யாராக இருந்தாலும் வருமான வரித்துறை சோதனை நடத்தும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
வரி ஏய்ப்பவர்கள் யாராக இருப்பினும் சோதனை நடக்கும்: தொடர் ரெய்டுகள் குறித்து முதல்வர் கருத்து
Published on

சிவகங்கையில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்ட முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மதுரை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்ட இல்லத்தில் வருமான வரிச்சோதனை நடத்தப்பட்டது மிகுந்த வேதனை அளிக்கிறது. வரி ஏய்ப்பு செய்பவர்கள் மீது வருமான வரித்துறை சோதனை நடத்துவது வழக்கமானதுதான்.

அந்த அடிப்படையில் போயஸ் தோட்டத்தில் சோதனை நடந்துள்ளது. இதற்கு யார் காரணம் என்பது அனைவருக்கும் தெரியும். இதில், தமிழக அரசுக்கு எந்த தொடர்பும் இல்லை. வருமான வரித்துறை, மாநில அரசின் கட்டுப்பாட்டில் இல்லை.

வரி ஏய்ப்பவர்கள் யாராக இருந்தாலும் சோதனை நடத்தப்படும். அதன் அடிப்படையில் சசிகலா குடும்பத்தினரின் வீடுகளில் சோதனை நடந்திருக்கிறது. அதன் தொடர்ச்சியாக கோர்ட்டு உத்தரவைப் பெற்று போயஸ் தோட்டத்தில் உள்ள முன்னாள் முதல் -அமைச்சர் இல்லத்தில் சோதனை நடைபெற்றுள்ளது.

சிலர் செய்த தவறு காரணமாக நடந்த இந்த சோதனை அ.தி.மு.க. தொண்டர்கள் அனைவருக்கும் மன வேதனையை ஏற்படுத்தியதோடு, கட்சிக்கும் களங்கத்தை ஏற்படுத்தி உள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த இல்லத்தை கோவிலாக கருதுகிறோம். எனவே அவரது இல்லத்தை நினைவிடமாக மாற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

வருமான வரி சோதனைக்கு தமிழக முதல்வரும், துணை முதல்வரும் தான் காரணம் என்று டி.டி.வி. தினகரன் கூறி வருவதை ஊடகங்கள் தான் பெரிதுபடுத்துகின்றன.

தமிழக அரசின் திட்டங்கள் குறித்து ஆளுநர் ஆய்வு செய்தார் என்று கூறுவது தவறு. கோவையில் சில நிகழ்ச்சிகளில் பங்கேற்க சென்ற அவர், அரசு செயல்படுத்தும் திட்டங்களை அதிகாரிகளிடம் கேட்டுத் தெரிந்து கொண்டுள்ளார்.

திட்டமிட்ட ஆய்வுக் கூட்டம் அல்ல, பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றபோது திட்டங்களை தெரிந்து கொண்டிருக்கிறார்.

அரசின் திட்டங்களையும் பாராட்டி இருக்கிறார். ஆனால் இந்த வி‌ஷயத்தில் எதிர்க்கட்சிகள் வேண்டு மென்றே திட்டமிட்டு குற்றம் சாட்டுகின்றன.

இதே போல சிவகங்கையில் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:-

சிவகங்கை மாவட்டம் ஆன்மீகம், வீரம் நிறைந்த மாவட்டம் ஆகும். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் அரசியலில் போராடி உயர் நிலைக்கு வந்தவர்கள். அம்மா வழியில் இந்த ஆட்சி நடைபெறுகிறது. கட்சியில் 90 சதவீதம் பேர் விசுவாசமானவர்கள்.

மக்களின் எண்ணப்படி இந்த ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆட்சியையும் கட்சியையும் ஒற்றுமையுடன் செயல்பட்டு காப்பாற்றி நல்ல பெயர் எடுப்போம். அனைத்து துறைகளும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

இந்த ஆட்சியில் குறைகாண முடியாததால் மு.க.ஸ்டாலின், துரைமுருகன் ஆகியோர் ஊழல் நடைபெற்றுள்ளதாக பொய்யான குற்றச்சாட்டுகளை திரும்ப திரும்ப கூறி வருகிறார்கள். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டதாக கூறி வருகிறார்கள்.

2010 வரை தி.மு.க. ஆட்சியில் 14 ஆயிரத்து 583 கொலை, கொள்ளை உள்பட பல்வேறு வழக்குகள் பதிவானது. 2011 முதல் 6 ஆண்டுகள் 12 ஆயிரத்து 128 வழக்குகள்தான் பதிவாகி உள்ளன. அனைத்து துறைகளிலும் அம்மாவின் வழியில் சிறப்பாக செயல் படும் அரசை இவர்களால் பொறுத்துக் கொள்ள முடியாமல் புளுகு மூட்டையை அவிழ்த்து விடுகிறார்கள். எத்தகைய வே‌ஷம் போட்டாலும் மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு வர முடியாது.

இந்தியாவிலேயே தமிழகம்தான் அமைதி பூங்காவாக உள்ளது. இவர்களை பார்த்ததும் ஒரு குட்டி கதை நினைவுக்கு வருகிறது.

ஒரு மரத்தின் மீது சேவல் உட்கார்ந்திருந்தது. அதை பார்த்த நரி அந்த சேவலை சாப்பிட விரும்பியது. நரி அந்த சேவலிடம் நாம் காட்டில் நண்பர்களாகி விட்டோம். கீழே இறங்கி வந்தால் உன்னிடம் விபரமாக கூறுகிறேன் என்று கூறியது.

இதற்கு சேவல் சற்று தூரத்தில் பார்த்தவாறு இருந்தது. அதற்கு நரி தூரத்தில் என்ன பார்க்கிறாய்? என்று கேட்டது. அதற்கு சேவல் வேட்டை நாய்கள் ஒன்றாக வருகிறது என்று கூறியது. நரி அதற்கு வேட்டை நாய்களுக்கு இதுபற்றி தெரியாது என்று கூறிவிட்டு ஓட்டம் எடுத்தது.

எனவே நரியின் தந்திரம் சேவலுக்கு புரிந்து விட்டது. அதுபோல் சிலர் நரிகளாக செயல்பட்டு வருகிறார்கள். இதற்கெல்லாம் அம்மா வழியிலான ஆட்சியை நடத்தும் நாங்கள் பயப்பட மாட்டோம். 4 ஆண்டுகள் மட்டுமல்ல அதற்கு மேலும் இந்த ஆட்சி தொடரும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com