தமிழகத்தில் ‘ஏர்செல்’ சேவை முடங்கியது குறித்து தலைமை செயல் அதிகாரி விளக்கம்

தமிழகத்தில் ‘ஏர்செல்’ சேவை முடங்கியது குறித்து தலைமை செயல் அதிகாரி சங்கரநாராயணன் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழகத்தில் ‘ஏர்செல்’ சேவை முடங்கியது குறித்து தலைமை செயல் அதிகாரி விளக்கம்
Published on

தமிழகத்தில் ‘ஏர்செல்’ சேவை 2-வது நாளாக நேற்றும் முடங்கியது. சமையல் கியாஸ் முன்பதிவு, ஆன்-லைன் டிக்கெட் முன்பதிவு, மின்னணு பண பரிமாற்றம் போன்ற முக்கிய தேவைகளுக்கு செல்போன் அவசியம் என்ற காலகட்டத்தில் சேவை பாதிப்பால் மக்களுடைய இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து ஏர்செல் சேவையில் இருந்து மற்ற செல்போன் நிறுவனங்களில் சேவையை பெறுவதில் வாடிக்கையாளர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். சில வாடிக்கையாளர்கள் சேவை மீண்டும் எப்போது கிடைக்கும்? என்று காத்திருக்கின்றனர்.

இதுகுறித்து ‘ஏர்செல்’ நிறுவனத்தின் தென்னிந்திய தலைமை செயல் அதிகாரி சங்கரநாராயணன் கூறியதாவது:-

செல்போன் சேவை நிறுவனத்தில் கடும் போட்டி இருப்பதால், ஏர்செல் நிறுவனத்தின் நிதி நிலைமை மோசமாக உள்ளது.

எல்லா செல்போன் சேவை நிறுவனங்களை போன்று ஏர்செல் நிறுவனமும் டவர்களை இன்னொரு கம்பெனியில் இருந்து குத்தகைக்கு எடுத்து தான் சேவையை வழங்கி வருகிறது. எங்களுக்கும், டவர் கம்பெனிக்கும் இடையே நிலுவை தொகை பாக்கி இருக்கிறது. எனவே தமிழ்நாட்டில் உள்ள 90 சதவீதம் டவர்களை அந்த கம்பெனி வலுக்கட்டயமாக கடந்த 3 நாட்களுக்கு முன்பு அணைத்துள்ளது. அதன்படி 9 ஆயிரம் டவர்களில் 8 ஆயிரம் டவர்கள் இயங்கவில்லை. இது எங்களுக்கும், இன்னொரு கம்பெனிக்கும் உள்ள நிதி மற்றும் சட்ட பிரச்சினை என்றாலும், வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படும் அளவுக்கு சென்றிருப்பது வருத்தம் அளிக்கிறது.

‘ஏர்செல்’ நிறுவனத்துக்கும், அந்த நிறுவனத்துக்கும் இடையே சமரச பேச்சுவார்த்தை தீவிரமாக நடத்தப்பட்டு வருகிறது. 2 அல்லது 3 நாட்களில் இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டு டவர்கள் எல்லாம் இயங்கும் என்று நம்பிக்கை இருக்கிறது.

ஒரு வேளை சமரச பேச்சுவார்த்தை முயற்சி தோல்வியில் முடிந்தால், மற்ற செல்போன் சேவை நிறுவனங்களுடன் கைக்கோர்த்து அந்த நிறுவனங்களின் சேவையை வாடிக்கையாளர்களுக்கு பெற்று தருவதற்கு முயற்சியில் ஏர்செல் நிர்வாகம் தீவிரமாக ஈடுபடும்.

தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட மாதம் ஒரு லட்சம் வாடிக்கையாளர்கள் ‘போர்ட் அவுட்’ (சர்வர்) முறையில் மற்ற செல்போன் சேவை நிறுவனங்களுக்கு செல்வார்கள். இப்போது 8 ஆயிரம் டவர்கள் செயல் இழந்துள்ளநிலையில் லட்சக்கணக்கான வாடிக்கையாளர்கள் ஒரே சமயத்தில் போர்ட் சர்வரை பயன்படுத்த முயற்சி செய்துள்ளனர். இதனால் போர்ட் அவுட் சர்வரில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. 24 மணி நேரத்தில் அது சரியாகி வரும். அவரவர்களுக்கு போர்ட் அவுட் எண் கிடைக்கும். அதன் பின்னர் அவர்கள் விரும்பும் செல்போன் சேவையை பெற்றுக்கொள்ளலாம்.

போர்ட் அவுட் முறையை பயன்படுத்தி கொள்ள ஏர்டெல் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார். #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com