நகை வியாபாரியிடம் ரூ.15 லட்சம் கொள்ளை- கொள்ளையன் கைது

சென்னை ராயப்பேட்டையில் நகை வியாபாரியிடம் பட்டப்பகலில் ரூ.15 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்டது. பொதுமக்கள் உதவியால் கொள்ளை ஆசாமி ஒருவர் கைது செய்யப்பட்டார். பணம் மீட்கப்பட்டது.
கைது
கைது
Published on

சென்னை:

சென்னை ராயபுரம் ஆதம் தெருவைச் சேர்ந்தவர் சாகுல் அமீது (வயது 29). இவர் செல்போன் வியாபாரம் செய்கிறார். பழைய நகைகளை வாங்கியும் விற்பனை செய்வார். இவர் நேற்று முன்தினம் மதியம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள வங்கி ஏ.டி.எம். மையம் ஒன்றில் ரூ.15 லட்சம் ரொக்கப்பணத்தை செலுத்த சென்றார். பணத்தை மோட்டார் சைக்கிளில் எடுத்து போனார்.

ஏ.டி.எம். மையம் அருகில் வைத்து இன்னொரு மோட்டார் சைக்கிளில் வந்த 3 மர்ம நபர்கள் சாகுல் அமீதை தாக்கி அவர் வைத்திருந்த ரூ.15 லட்சம் ரொக்கப்பணத்தை கொள்ளை அடித்து சென்றனர். சாகுல் அமீதும் விடவில்லை. கொள்ளையர்களை விரட்டி சென்றார். இதைப்பார்த்த பொதுமக்களும் நிறைய பேர் திரண்டு வந்து கொள்ளையர்களை விரட்டினார்கள். இதனால் கொள்ளை ஆசாமிகள் 3 பேரும் நிலை குலைந்தனர்.

கொள்ளை ஆசாமிகளில் ஒருவர் பொதுமக்களிடம் மாட்டினார். கொள்ளை அடித்த பணமும் அவரிடம் இருந்தது. அவரை ராயப்பேட்டை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து பணமும் பத்திரமாக மீட்கப்பட்டது. கைதான கொள்ளை ஆசாமியின் பெயர் விக்னேஷ்வரன் (23). கொட்டிவாக்கத்தைச் சேர்ந்தவர். தப்பி ஓடிய மேலும் 2 கொள்ளையர்களை போலீசார் தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் ராயப்பேட்டை பகுதியில் நேற்று முன்தினம் பகலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

X

Maalai Malar
www.maalaimalar.com