

சென்னை:
சென்னை ஐகோர்ட்டில், திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல், பூலத்தூரை சேர்ந்த சமூக சேவகர் கோகுல கிருஷ்ணன் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்தார்.
அதில், தமிழகத்தில் உள்ள வனப்பகுதிகளில் பட்டா நிலத்தில் பல ஆண்டுகளாக விவசாயம் செய்கின்றனர். இந்த விவசாய நிலத்துக்குள் காட்டுப்பன்றிகள் புகுந்து பயிர்களை நாசம் செய்து விடுகின்றன. கொடைக்கானல் மலையில் மட்டும் ஒரு கோடி காட்டுப்பன்றிகள் உள்ளன. இவற்றில் 80 சதவீதம், மலை கிராமம் அருகே உலாவுகின்றன.
முட்புதர்களில் மறைந்து கொண்டு பயிர்களை நாசம் செய்வதுடன், மனிதர்களையும் தாக்குகின்றன. பிற மாநிலங்களில் காட்டு பன்றிகள், நீலான் மான்கள் உள்ளிட்ட விலங்குகளை சுட்டுக்கொல்ல அனுமதி வழங்கப்படுகிறது. அது போல தமிழகத்தில் உள்ள வனப்பகுதிகளில் பயிர்களை நாசம் செய்யும் காட்டுப் பன்றிகளை விவசாயிகள் சுட்டுக் கொல்ல அனுமதிக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார்.
மேலும் அந்த மனுவில், சுட்டுக்கொல்லப்படும் பன்றிகளை விவசாயிகளே வைத்துக் கொள்ளவும், அதற்காக 100 கிலோ கறிக்கு ரூ.500 விவசாயிகளிடம் அரசு வசூலித்து கொள்ளவும் உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த மனுவுக்கு பதிலளித்த தமிழக தலைமை வனக் காவலர், காட்டு பன்றிகளின் எண்ணிக்கை அபரிமிதமாக வளர்ந்துள்ளது. இந்த பன்றிகள் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்கின்றன. இதனால் கடந்த 5 ஆண்டுகளில் விவசாயிகளுக்கு ரூ.1.88 கோடி இழப்பீடு கொடுக்கப்பட்டுள்ளது.
அதனால் வனவர், வனபாதுகாவலர் ஆகியோர் குடியிருப்பு பகுதிக்குள் வரும் காட்டு பன்றிகளை சுட்டுக் கொல்ல அனுமதிக்க வேண்டும் என்று தமிழக உள்துறை செயலாளருக்கு பரிந்துரை செய்துள்ளோம் என்று கூறியிருந்தார்.
இதை ஏற்றுக்கொண்ட ஐகோர்ட்டு இதுகுறித்து தகுந்த உத்தரவை பிறப்பிக்கும் படி தமிழக அரசுக்கு கடந்த ஆண்டு உத்தரவிட்டது. ஆனால் தமிழக அரசு இதுவரை எந்த உத்தரவும் பிறப்பிக்காததால், ஐகோர்ட்டில் மீண்டும் கோபால கிருஷ்ணன் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன், சுந்தர் ஆகியோர் விலங்குகளுக்கு எதிரான கொடுமைகளை தடுக்கும் சங்கத்தை இந்த வழக்கில் எதிர்மனுதாரராக சேர்க்கவேண்டும் என்று கூறி விசாரணையை அடுத்த மாதத்துக்கு தள்ளிவைத்தனர்.