

‘நீட்’ தேர்வினால் எம்.பி.பி.எஸ். மருத்துவம் படிக்கும் வாய்ப்பை இழந்த மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தை கண்டித்து சென்னையில் இன்று மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நுங்கம்பாக்கத்தில் உள்ள லயோலா கல்லூரி மாணவ-மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து விட்டு இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கல்லூரி முன்பு அமர்ந்து மாணவி அனிதாவின் மரணத்திற்கு பதில் சொல்ல வேண்டும் என்று கோஷமிட்டனர். மத்திய, மாநில அரசுகளை கண்டித்து ஆவேசமாக பேசினார்கள்.
நீட் தேர்வை முற்றிலும் நீக்க வேண்டும் என்று மாணவர்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.
மாணவர்களின் போராட்டத்திற்கு நடிகர்-நடிகைகளும் ஆதரவு அளித்தனர்.
நடிகை ரோகிணி போராட்டத்தில் பங்கேற்று ஆவேசமாக பேசியதாவது:-
“நீட் தேர்வு அப்பாவி மாணவியின் உயிரை பறித்து விட்டது. மாநில பாடத்திட்டத்தில் படித்த அனிதா அதிக மதிப்பெண் எடுத்தும் டாக்டர் கனவு நிறைவேறாமல் போய்விட்டது. இதற்கு காரணம் நீட் தேர்வுதான்.
நீட் தேர்வை தமிழகத்தில் கொண்டு வரக்கூடாது என்று சொல்லவில்லை. அதற்கு முன்பாக மாணவர்களை தயார்படுத்த வேண்டியது அரசின் கடமையாகும்.
நாடு முழுவதும் ஒரே விதமான பாடத்திட்டம் அமைந்து இருந்தால்தான் நீட் தேர்வை நடத்த வேண்டும். பொதுவான பாடத்திட்டம் இல்லாத நிலையில் நீட் தேர்வை கொண்டு வந்து தமிழக மாணவர்களை கட்டாயப்படுத்துவது நியாயமல்ல.
இதனால் கூலி தொழிலாளியின் மகள் அனிதா விபரீத முடிவை மேற்கொண்டார். இது போன்ற சம்பவம் இனி நடக்காமல் தடுக்க மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
திரைப்பட இயக்குனர் கவுதமன் இப்போராட்டத்தில் கலந்து கொண்டு கூறியதாவது:-
மத்திய, மாநில அரசுகள் நீட் தேர்வை அமல்படுத்தி மாணவி அனிதாவின் உயிரை பறித்துள்ளனர். இதனால் தமிழகத்தில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள் தங்களது பள்ளி, கல்லூரிகள் முன்பு அழைப்பு விடுத்து இருந்தும் அதன் அடிப்படையில் லயோலா கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தினார்கள். அவர்களுக்கு எனது ஆதரவை தெரிவித்தேன். தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும் வரை போராட்டம் தொடரும்.
ஜல்லிக்கட்டு போராட்டம் போல இந்த போராட்டத்தையும் முன் எடுத்து செல்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.