

புதுடெல்லி:
இஸ்ரோ அமைப்பின் தலைவர் டெல்லி ஐஐடி-யில் இன்று நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டார். இந்நிகழ்வில் பேசிய சிவன் சந்திராயன் 2 முடிவல்ல, அதைவிட அதிநவீன செயற்கை கோள்கள் நிலவிற்கு அனுப்பப்படும் என தெரிவித்தார்.
‘சந்திரயான்-2 பற்றி நீங்கள் அனைவரும் அறிந்திருப்பீர்கள். நிலவின் மேற்பரப்பில் இருந்து 300 மீட்டர் வரை அனைத்து அமைப்புகளும் சரியாக செயல்பட்டன. ஆனால், விக்ரம் லேண்டரை மென்மையான முறையில் தரையிறக்கும் கட்டத்தை நம்மால் எட்ட முடியவில்லை.
சந்திராயன்-2 பயணத்தின் மூலம் தொழில்நுட்ப முயற்சிகளை சரியாக அமைப்பதற்கு மிகவும் மதிப்புமிக்க தகவல்கள் கிடைத்துள்ளன. அவற்றை கொண்டு அனைத்தையும் சரிசெய்து எதிர்காலத்தில் லேண்டர் மென்மையான தரையிறக்கம் அடைவதற்கு தனது அனுபவங்கள், அறிவு மற்றும் தொழில்நுட்ப வலிமை அனைத்தையும் இஸ்ரோ பயன்படுத்தும் என நான் உறுதியளிக்கிறேன்.
சந்திரயான் -2 கதையின் முடிவு அல்ல. ஆதித்யா எல் 1 சோலார் மிஷன், மனித விண்வெளிப் பயணம் திட்டம் போன்ற திட்டங்கள் இஸ்ரோவின் ஆய்வில் உள்ளன. வரும் மாதங்களில் ஏராளமான அதிநவீன செயற்கைக்கோள்களும் விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டுள்ளன.
மேலும் விக்ரம் லேண்டரை எவ்வாறு மென்மையாக தரையிறக்குவது என்பது குறித்த செயல்திட்டத்தில் நாங்கள் பணியாற்றி வருகிறோம்.
இன்றைய நவீன உலகில் பல்வேறு துறைகளில் வாய்ப்புகள் குவிந்து கிடக்கின்றன. உங்களுக்கான துறையை மிகுந்த கவனத்துடன் தேர்வு செய்யுங்கள்’ என்று சிவன் கூறினார்.