

பா.ஜனதா கட்சியின் மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் சார்பில் அமைக்கப்பட்ட ‘மக்கல் நல சேவை மையம்’ மூலம் ஜி.எஸ்.டி. பதிவு தொடக்க விழா இன்று கோவையில் நடந்தது.
இதில் மத்திய ரெயில்வே துறை மந்திரி சுரேஷ் பிரபு கலந்து கொண்டு ஜி.எஸ்.டி. பதிவை தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
வரலாற்று சிறப்புமிக்க ஜி.எஸ்.டி. வரிவிதிப்பை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. இது நாட்டின் மாற்றத்தை நோக்கிய முதல் படியாகும்.
ஜி.எஸ்.டி. மூலம் நாட்டில் ஊழல் குறையும். பொருளாதாரம் முன்னேற்றம் அடையும். மக்கள் ஜி.எஸ்.டி. யை பற்றி புரிந்து கொள்வார்கள்.
உலகின் மிகப்பெரிய நாடான இந்தியாவில் ஓரே வரி விதிப்பு முறை பெரிய அளவில் சீர்திருத்தத்தை கொண்டு வரும். இதனால் நாட்டில் விலைவாசி குறையும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதன்பின்னர் நிருபர்களின் கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார். அதன் விவரம் வருமாறு:-
கேள்வி:-ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் ரெயில்வே துறையில் மாற்றம் வருமா?
பதில்: ரெயில்வே துறையில் தற்போது எந்த மாற்றமும் இல்லை.
கேள்வி:-ஜி.எஸ்.டி.யில் பெட்ரோல்- டீசலுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அந்த நிலை தொடருமா?
பதில்:- பெட்ரோல்- டீசல் விலை உயர்வை ஜி.எஸ்.டி. கவுன்சில் தான் முடிவு செய்து அறிவிக்கும். பின் நாட்களில் பெட்ரோல்- டீசல் விலை கட்டாயம் உயரும் என நான் எதிர் பார்க்கிறேன்.
கேள்வி.:- ஜி.எஸ்.டி. யால் ரெயில் டிக்கெட் கட்டணம் உயர வாய்ப்புள்ளதா?
பதில்:-ரெயில்வே துறை மத்திய அரசின் ஒரு அங்கம். ஒட்டுமொத்தமாக மத்திய அரசு அமல்படுத்தும் போது ரெயில்வே துறையும் அமல்படுத்தும்.
ரெயில்வே துறையை மேம்படுத்தப்படுத்த ரூ.3 லட்சத்து 75 ஆயிரம் கோடி முதலீடு செய்துள்ளது. இதில் ரூ.1 லட்சம் கோடி ரெயில் நிலையங்களுக்கும், ரூ.40 கோடி என்ஜீன்களை மேம்படுத்தவும் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இந்த பணிகளில் அமெரிக்கா, பிரெஞ்சு நிறுவனங்கள் ஈடுபடுகின்றன. இதன் மூலம் நாட்டில் உள்ள சிறு, குறு தொழில் முனைவோர் பயன் அடைவர். ரெயில் நிலையங்களில் சட்டம்- ஒழுங்கு, பாதுகாப்பு அந்தந்த மாநிலங்களிடம் உள்ளது. எனவே மாநில அரசு இதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.