பிளாஸ்மா சிகிச்சை உதவும் என்பதற்கு ஆதாரம் இல்லை - மத்திய அரசு

கொரோனாவை குணப்படுத்த பிளாஸ்மா சிகிச்சை உதவும் என்பதற்கு ஆதாரம் இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

புதுடெல்லி:

மத்திய சுகாதாரத்துறை அமைச்சக இணை செயலாளர் லாவ் அகர்வால் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அவர் கூறியதாவது:-

கொரோனா வைரசை குணப்படுத்த அங்கீகரிக்கப்பட்ட சிகிச்சை முறை எதுவும் இல்லை. பிளாஸ்மா சிகிச்சை முறை, இன்னும் பரிசோதனை கட்டத்தில்தான் இருக்கிறது. பிளாஸ்மா சிகிச்சை உதவிகரமாக இருக்கும் என்பதற்கு விஞ்ஞானரீதியான ஆதாரம் எதுவும் இன்னும் வெளியாகவில்லை. அதுவரை ஆராய்ச்சி நோக்கத்துக்காக மட்டுமே பிளாஸ்மா சிகிச்சை முறையை பயன்படுத்த வேண்டும். மற்றவற்றுக்கு பயன்படுத்துவது சட்டவிரோதமாகும். உரிய வழிகாட்டுதலுடன், உரிய முறையில் பிளாஸ்மா சிகிச்சையை பயன்படுத்தாவிட்டால், அது உயிருக்கு அச்சுறுத்தலாகி விடும்.

ஊரடங்குக்கு முன்பு, கொரோனா பாதிப்பு எண்ணிக்கை இரட்டிப்பு ஆக 3.2 நாட்கள்தான் ஆனது. ஆனால், இப்போது 10.2 நாட்கள் ஆகிறது. கொரோனா பாதிப்பு இருந்த 17 மாவட்டங்களில், கடந்த 28 நாட்களாக புதிதாக யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

கொரோனா பாதிப்பு நிறைந்த 20 நாடுகளின் மொத்த மக்கள்தொகை, இந்திய மக்கள்தொகைக்கு ஏறக்குறைய சமமாகும். ஆனால், இந்தியாவின் கொரோனா பலி எண்ணிக்கையை விட அந்நாடுகளில் 200 மடங்கு அதிக உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.

கொரோனாவில் குணமடைந்து, மீண்டும் கொரோனா தாக்கியவர்கள் எண்ணிக்கை மிகக்குறைவுதான். அதனால் அதுபற்றி எந்த முடிவுக்கும் வர முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com