குல்பூஷண் ஜாதவை காப்பாற்றவே சர்வதேச கோர்ட்டை நாடினோம்: மத்திய அரசு தகவல்

பாகிஸ்தானில் சட்ட விரோதமாக அடைத்து வைக்கப்பட்டு இருக்கும் குல்பூஷண் ஜாதவை காப்பாற்றவே சர்வதேச கோர்ட்டை நாடியதாக மத்திய அரசு கூறியுள்ளது.
குல்பூஷண் ஜாதவை காப்பாற்றவே சர்வதேச கோர்ட்டை நாடினோம்: மத்திய அரசு தகவல்
Published on

இந்திய கடற்படையில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் குல்பூஷண் ஜாதவ். பின்னர் சொந்த தொழில் செய்து வந்த அவர், ஈரானில் இருந்து பாகிஸ்தான் சென்றிருந்தார். அங்கு அவர் இந்தியாவுக்காக உளவு பார்த்ததாக கூறி கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

அவரது வழக்கை விசாரித்து வந்த பாகிஸ்தான் ராணுவ கோர்ட்டு கடந்த மாதம் குல்பூஷண் ஜாதவுக்கு மரண தண்டனை விதித்தது. இதை அந்த நாட்டு ராணுவ தளபதியும் உறுதி செய்தார். இந்த விவகாரம் இந்தியாவில் பெரும் அதிர்ச்சியை கிளப்பியதுடன், இரு நாடுகளுக்கு இடையேயான உறவிலும் விரிசலை ஏற்படுத்தியது.

அப்பாவியான குல்பூஷண் ஜாதவுக்கு மரண தண்டனை விதித்ததை ரத்து செய்யுமாறு பாகிஸ்தானை கேட்டுக்கொண்ட மத்திய அரசு, அவருக்கு தண்டனையை நிறைவேற்றினால் அது திட்டமிட்ட படுகொலையாகவே கருதப்படும் என்று கூறியது.

மேலும் ஜாதவுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய திட்டமிட்ட மத்திய அரசு, அவரது வழக்கு தொடர்பான விவரங்களை பாகிஸ்தானிடம் கேட்டது. மேலும் ஜாதவுக்கு தூதரக உதவிகளை செய்து கொடுக்குமாறும் பாகிஸ்தான் அரசை வலியுறுத்தியது. ஆனால் இதற்கு பாகிஸ்தான் செவிசாய்க்கவில்லை.

எனவே ஹேக்கில் உள்ள சர்வதேச கோர்ட்டில் இந்தியா வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த கோர்ட்டு குல்பூஷண் ஜாதவின் மரண தண்டனைக்கு நேற்று முன்தினம் இடைக்கால தடை விதித்தது. இதில் இறுதி முடிவு எடுக்கும் வரை தண்டனையை நிறைவேற்றக்கூடாது என பாகிஸ்தானுக்கு உத்தரவிட்டது. இது பாகிஸ்தானுக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் குல்பூஷண் ஜாதவின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டதாலும், அவர் சட்டவிரோதமாக காவலில் வைக்கப்பட்டு இருப்பதாலும் அவரை காப்பாற்றவே சர்வதேச கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டதாக மத்திய அரசு கூறியுள்ளது. இது குறித்து வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் கோபால் பாக்லே கூறியதாவது:-

ஜாதவுக்கு தூதரக உதவிகளை ஏற்படுத்தி தருமாறு 16 முறை பாகிஸ்தானிடம் முறையிடப்பட்டது. மேலும் ஜாதவின் வழக்கு தொடர்பான விவரங்களை அளிக்குமாறும் கேட்டுக்கொண்டோம். ஆனால் இது தொடர்பாக பாகிஸ்தான் எந்த பதிலும் அளிக்கவில்லை.

இதைப்போல ஜாதவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து அவரது குடும்பத்தினர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு தொடர்பான நிலவரங்களையும் பாகிஸ்தான் அளிக்கவில்லை. இவ்வாறு இந்தியாவின் கோரிக்கைளை பாகிஸ்தான் அரசு தொடர்ந்து நிராகரித்ததால், இந்த விவகாரத்தை கவனமாக பரிசீலித்து சர்வதேச கோர்ட்டை நாடினோம்.

இவ்வாறு கோபால் பாக்லே கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com