பி.என்.பி மோசடியில் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணைக்கு மத்திய அரசு எதிர்ப்பு

பஞ்சாப் நேஷனல் வங்கியில் நடந்த மோசடியை சிறப்பு புலனாய்வுக்குழு விசாரிக்கக்கோரி சுப்ரீம் கோர்டில் தொடரப்பட்டுள்ள பொதுநல வழக்கிற்கு மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. #PNBScam
பி.என்.பி மோசடியில் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணைக்கு மத்திய அரசு எதிர்ப்பு
Published on

புதுடெல்லி:

பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை பிராடி ரோடு கிளை மூலம் நடந்த ரூ.11,700 கோடி மோசடி நாடுமுழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மும்பையை சேர்ந்த பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி இந்த மோசடியில் ஈடுபட்டார். அவர் மற்றும் 3 பேர் வெளிநாடு தப்பி விட்டனர். இதுதொடர்பாக சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

இந்த மோசடி தொடர் பாக பஞ்சாப் நேஷனல் வங்கி கிளையிலும் சி.பி.ஐ. சோதனை நடத்தியது. நிரவ் மோடி நிறுவன அதிகாரியிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதேபோல அமலாக்கத்துறை அதிகாரிகளும் நாடு முழுவதும் உள்ள நிரவ் மோடி நிறுவனங்களிலும் சோதனை நடத்தினர்.

இந்த நிலையில் பஞ்சாப் நேஷனல் வங்கி முறைகேடு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.

பொதுநல மனுவில் ‘‘பஞ்சாப் நேஷனல் வங்கி முறைகேடு தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்க வேண்டும். வங்கியில் கடன் பெற்று திரும்ப செலுத்தாதது தொடர்பாக வரைமுறைகளை வகுக்க வேண்டும்’’ என்று கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட சுப்ரீம் கோர்ட்டு முதற்கட்ட விசாரணையை இன்று தொடங்கியது. மல்லையா ஓடிப்போனபோது மத்திய அரசு எதுவும் செய்யவில்லையோ, அதே போல தற்போதும் எந்த நடவடிக்கையும் எடுக்காது. எனவே, சிறப்பு புலானாய்வுக்குழு விசாரணைக்கு உத்தரவிடவேண்டும் மற்றும் நிரவ் மோடியை 2 மாதங்களுக்குள் இந்தியா கொண்டு வர அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுதரர் வினீத் தாண்டா வாதிட்டார்.

ஆனால், மத்திய அரசின் பல்வேறு விசாரணை முகமைகள் தற்போது விசாரித்து வருவதால், சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணை தேவையில்லை என மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்தார். இதனை அடுத்து, இந்த வழக்கு மார்ச் 16-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. #PNBScam #PNBFraudCase #TamilNews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com