காவிரி மேலாண்மை வாரியம் பிரச்சினை - சட்ட வல்லுனர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

காவிரி விவகாரம் தொடர்பாக சட்ட வல்லுனர்களுடன் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை ஆலோசனை நடத்துகிறார். #CauveryMangementBoard
காவிரி மேலாண்மை வாரியம் பிரச்சினை - சட்ட வல்லுனர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
Published on

தமிழ்நாட்டுக்கு ஆண்டுதோறும் 177.25 டி.எம்.சி. தண்ணீரை திறப்பதற்கு 6 வார காலத்துக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

ஆனால் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கவில்லை. அது மட்டுமின்றி 3 மாதம் அவகாசம் கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு மனு செய்துள்ளது.

இதனால் மத்திய அரசை கண்டித்து தமிழ்நாட்டில் பல்வேறு கட்சிகளும் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. இன்று 7-வது நாளாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் நடந்தன.

நாளை (ஞாயிற்றுக்கிழமை) சென்னையில் காவிரி பிரச்சினைக்காக நடிகர், நடிகைகள் போராட்டம் நடத்த உள்ளனர். 11-ந்தேதி விவசாய அமைப்புகள் போராட்டம் நடத்த ஏற்பாடு செய்துள்ளன.

இதற்கிடையே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததால் மத்திய அரசு மீது தமிழக அரசு கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது. அந்த வழக்கு விசாரணை நாளை மறுநாள் (9-ந்தேதி) சுப்ரீம் கோர்ட்டில் எடுத்துக் கொள்ளப்பட உள்ளது.

அதே நேரத்தில் மத்திய அரசு, ‘‘ஸ்கீம் என்றால் என்ன?’’ என்று விளக்கம் கேட்டு தாக்கல் செய்துள்ள மனுவும் 9-ந்தேதி விசாரணைக்கு வர உள்ளது. இரு வழக்குகளிலும் தமிழக அரசு சார்பில் ஆஜராகும் வக்கீல்கள் வலுவான வாதங்களை எடுத்து வைத்து வாதாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த இரு வழக்குகளிலும் தமிழக அரசு சார்பில் 9 பேர் கொண்ட மூத்த வழக்கறிஞர்கள் ஆஜராக உள்ளனர். அந்த சட்ட வல்லுனர்கள் குழுவில் மூத்த வக்கீல் சேகர்நாப்தே, லட்சுமணன், அருணாசலம் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

அவர்கள் 9 பேரும் இன்று டெல்லியில் இருந்து சென்னை வந்தனர். இன்று மாலை 4 மணிக்கு அவர்கள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com