

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பை நடைமுறைப்படுத்தும் செயல் திட்டத்தை (ஸ்கீம்) உருவாக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு இதற்காக கெடுவும் விதித்தது. ஆனால் மத்திய அரசோ, கர்நாடக தேர்தலை காரணம் காட்டி அவகாசம் கேட்டது. இதையடுத்து தீர்ப்பை அமல்படுத்தாத மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்த உச்சநீதிமன்றம், தீர்ப்பை அமல்படுத்துவது தொடர்பாக மே 3-ம் தேதிக்குள் வரைவு செயல் திட்டத்தை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தது.
உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலின்படி வரைவு செயல் திட்டம் தயாரிக்கும் பணிகள் நடைபெற்றன. ஆனால் கர்நாடக தேர்தல் முடியும் வரை இந்த பிரச்சனையை இழுத்தடிக்க மத்திய அரசு தீவிரம் காட்டுவதாகவும், வழக்கு விசாரணைக்கு வரும்போது மத்திய அரசு வரைவு செயல் திட்டத்தை தாக்கல் செய்ய வாய்ப்பு இல்லை என்றும் தகவல்கள் வெளியாகின.
இந்த பரபரப்பான சூழ்நிலையில், காவிரி செயல் திட்டம் தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு சார்பில் வரைவு செயல் திட்ட அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. இதற்கு காரணமாக கர்நாடக தேர்தலையும், பிரதமரின் பிரசாரப் பயணத்தையும் குறிப்பிட்டுள்ளது.