

திருச்சி:
திருச்சி மாநகரில் ஆதரவற்றவர்கள் பலர் சுற்றித்திரிகின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் திருச்சி சந்திப்பு, ரெயில் நிலைய நடைபாதை மற்றும் சத்திரம் பேருந்து நிலையம், மத்திய பேருந்து நிலையம், கோவில் பகுதிகள் ஆகிய இடங்களில் தங்கியிருந்து வந்தனர்.
அவர்கள் தங்குவதற்கு வசதியாக சந்திப்பு ரெயில் நிலையம் அருகே கட்டிடம் கட்டப்பட்டது. இருப்பினும் அதனை சிலர் பயன்படுத்து வதில்லை. எப்போதும்போல் நடைபாதை உள்ளிட்ட இடங்களில் வசித்தனர்.
இந்த நிலையில் கொரானா வைரஸ் ஊரடங்கு உத்தரவால் ரெயில் நிலைய நடை பாதை மூடப்பட்டது. இதனால் அங்கு தங்கியிருந்த பலர் வேறு இடங்களை நோக்கி நகர்ந்தனர். அதில் பலர் திருச்சி காவேரிஆற்றுப் பாலத்தை நோக்கி படையெ டுத்தனர். காவிரி ஆற்றுப்பாலத்தில் ஆதரவாளர்கள் சிலர் தங்கியிருந்து வந்த நிலையில் தற்போது ஊரடங்கு உத்தரவால் அதிகம் பேர் அங்கு தஞ்சமடைந்துள்ளனர்.
அவர்களுக்கு தன்னார்வலர்கள் பலர் தேவையான உதவிகளை செய்து வருகின்றனர். காலை, மதியம், இரவு என உணவு சமைத்து கொடுக்கின்றனர். சமூக விலகலை கடைபிடித்து அங்குள்ளவர்களுக்கு உணவு சப்ளை செய்யப்படுகிறது. ஊரடங்கால் ஆதரவற்றவர்கள் தவித்து வந்த நிலையில் அவர்களை காவிரி பாலம் அரவணைத்து உள்ளது.
இதுபற்றி அவர்கள் கூறு கையில், தற்போது திருச்சியில் வெளுத்து வாங்கி வரும் வெயிலால் மிகவும் பாதிக்கப்பட்டுளோம். நேற்று முன்தினம் சிறிது நேரம் மழையும் பெய்தது. இதனால் காவிரி ஆற்றுப்பாலத்தில் தங்குவதற்கு மிகவும் சிரமமாக உள்ளது. தன்னார்வலர்கள் பலர் உணவு கொண்டு வருவதால் நாங்கள் அதற்காக இங்கு இருக்க வேண்டிய நிலை உள்ளது.
இரவு நேரங்களில் இங்கு தான் படுத்து விட்டு செல்கிறோம். காலையில் சிறிது நேரம் இருப்போம். அதன் பிறகு வேறு இடங்களுக்கு சென்றுவிடுவோம்.
ஏனென்றால் கொளுத்தும் வெயிலில் காவிரி பாலத்தில் இருக்க முடியவில்லை. எனவே அதிகாரிகள் எங்களுக்கு தேவையான உதவிகளை செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவில்களில் அன்னதானம் நிறுத்தப்பட்டதால் தன்னார்வலர்கள் கொடுக்கும் உணவுகளையே சாப்பிட வேண்டிய நிலை உள்ளது. அதனால் எங்கு உணவு கிடைக்கிறதோ அங்கு செல்கிறோம் என்றனர்.
கடந்த சில தினங்களாக திருச்சியில் 106 டிகிரிக்கும் மேல் வெயில் வாட்டி வதைத்து வருவதால் ஆதரவற்றவர்களுக்கு உணவு வழங்க மாற்று இடம் ஒதுக்கித்தர வேண்டும் என்றும் காவிரி பாலத்தில் தஞ்சம் அடைந்தவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.