ஆப்கானிஸ்தான்: காவல் நிலையம் அருகே நடத்தப்பட்ட கார் வெடிகுண்டு தாக்குதலில் 3 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் காவல் நிலையம் அருகே இன்று நடத்தப்பட்ட கார் குண்டு வெடிப்பு தாக்குதலில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும், 43 பேர் படுகாயமடைந்தனர்.
தாக்குதல் நடைபெற்ற பகுதி
தாக்குதல் நடைபெற்ற பகுதி
Published on

காபுல்:

ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான் பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். அந்நாட்டின் சில பகுதிகளை கைப்பற்றி அங்கு உள்ளூர் வரிவிதிப்பு உள்ளிட்ட நிர்வாகங்களை தங்கள் வசப்படுத்தியுள்ள தலிபான்கள் போட்டி அரசாங்கத்தை நடத்தி வருகின்றனர்.

இந்த பயங்கரவாதிகளை ஒழிக்கும் நடவடிக்கையில் உள்நாட்டு படைகளும், அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படைகளும் வான்வழி மற்றும் தரைவழி தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் பயங்கரவாத குழுக்களுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே அடிக்கடி மோதல் சம்பவங்கள் அரங்கேறிவருகிறது.  

இந்நிலையில், அந்நாட்டின் லஹ்மேன் மாகாணத்தின் அலிஷிங் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையம் அருகே இன்று குண்டுகள் நிரப்பப்பட்டு நிறுத்தப்பட்டிருந்த காரை பயங்கரவாதிகள் திடீரென வெடிக்கச் செய்தனர்.

இந்த தாக்குதல் சம்பவத்தில் இரண்டு போலீசார் உள்பட 3 பேர் உடல்சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 43 பேர் படுகாயமடைந்தனர். 

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற மீட்புக்குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.

இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த ஒரு பயங்கரவாத அமைப்புகளும் தற்போதுவரை பொறுப்பு ஏற்கவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com